Last Updated:
எட்னா எரிமலை ஸிஸிலி அருகே மீண்டும் கரும்புகை வெளியிட்டு பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது.
இத்தாலியில் உள்ள உலகப் புகழ்பெற்ற எட்னா எரிமலை மீண்டும் கரும்புகைத் துகள்களை வெளியிடத் தொடங்கியுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
இத்தாலியின் ஸிஸிலி நகருக்கு அருகில் பல ஆயிரம் ஆண்டுகளாக அவ்வப்போது நெருப்புக் குழம்பை கக்கி வரும் எட்னா மலை, யுனெஸ்கோ அங்கீகரித்த கலாச்சார பாரம்பரிய சின்னமாகவும் திகழ்கிறது. பனி சூழ்ந்து காணப்படும் எட்னாவின் அசைவுகள், கடந்த 2700 ஆண்டுகளாக வரலாற்றில் தொடர்ந்து பதிவாகி வரும் நிலையில் தற்போது மீண்டும் ஆக்டிவ் ஆகியுள்ளது. பல மீட்டர் உயரத்திற்கு கரும்புகைகளை வெளியேற்றத் தொடங்கியுள்ளது.
இது விமானப் போக்குவரத்துத் துறைக்கு அச்சுறுத்தலாக பார்க்கப்படும் நிலையில், எரிமலைகள் கண்காணிப்பகம் விமானத் துறைக்கு உச்சபட்ட எச்சரிக்கையை வெளியிட்டுள்ளது.
எனினும், அருகில் உள்ள கேட்டானியா ஃபோன்ட்டாநரோஸ்ஸா விமான நிலையத்திற்கு விமானங்களின் வருகை, புறப்பாடுகளில் மாற்றம் எதுவும் செய்யப்படவில்லை. கரும்புகைத் துகள்கள் வெளியாவது இன்னும் அதிகரித்தால் மாற்றங்கள் செய்ய முடிவெடுத்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அடிக்கடி நெருப்புக் குழம்பை உமிழும் எரிமலை என்பதால், 24 மணி நேரமும் கண்காணிக்கப்படும் எட்னா மலை, விரைவில் தன் வேலையைக் காட்டும் என அஞ்சப்படுகிறது.


