Last Updated:
64 கிலோ மீட்டர் நீள சோதனைப் பாதையானது ராஜஸ்தான் மாநிலத்தின் ஜோத்பூர் பிரிவின் கீழ்வரும் குதா மற்றும் தாதானா மித்ரி இடையே அமைக்கப்பட்டு வருகிறது.
ரயில்களுக்கான அதிவிரைவு தண்டவாள சோதனைப் பாதையை நிறைவு செய்திருப்பதன்மூலம் இந்திய ரயில்வே துறை ஒரு மிகப்பெரிய மைல்கல்லை அடைய இருக்கிறது. இது 2025-26 நிதி ஆண்டின் இறுதிக்குள் நிறைவு செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த அதிவிரைவு ரயில் பாதையானது ரிசர்ச் டிசைன் அண்ட் ஸ்டாண்டர்ட் ஆர்கனைசேஷன் மூலமாக மேம்படுத்தப்பட்டு வருகிறது. இது இந்திய ரயில்வே ஆராய்ச்சி மற்றும் புதுமையாக்கத்தை வலுப்படுத்தும் ஒரு குறிப்பிடத்தக்க முயற்சியாக அமைகிறது.
இந்த 64 கிலோ மீட்டர் நீள சோதனைப் பாதையானது ராஜஸ்தான் மாநிலத்தின் ஜோத்பூர் பிரிவின் கீழ்வரும் குதா மற்றும் தாதானா மித்ரி இடையே அமைக்கப்பட்டு வருகிறது. இந்த ஜோத்பூர் பிரிவு ஜெய்ப்பூரில் இருந்து தோராயமாக 70 கிலோ மீட்டர் தூரத்தில் அமைந்துள்ளது. இந்த ப்ராஜெக்ட் வடமேற்கு ரயில்வே பிரிவின் கீழ் இயங்குகிறது. இந்த பாதையை அமைப்பதற்கு 967 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.
கட்டுப்படுத்தப்பட்ட சூழலில் ரயில் பெட்டிகளை சோதனை செய்தல் மற்றும் சான்று அளிப்பதற்காக இந்த வசதி பிரத்தியேகமாக வடிவமைக்கப்பட்டுள்ளது. வடமேற்கு ரயில்வே அதிகாரிகளைப் பொறுத்தவரை, ஏற்கனவே 58 கிலோ மீட்டர் தூரத்திற்கான பாதை அமைக்கப்பட்டு விட்டதாகவும், மீதமிருக்கக்கூடிய வேலை தொடர்ந்து சீராக நடைபெற்று வருவதாகவும் சொல்லப்படுகிறது. இந்த மொத்த திட்டமும் மார்ச் 2026க்குள் நிறைவடையும் என்று சொல்லப்படுகிறது.
வழக்கமான பயணிகள் அல்லது சரக்கு ரயில் சேவைகளுக்கு எந்த ஒரு இடையூறும் வராமல், அதே சமயத்தில் செயல்திறன், பாதுகாப்பு மற்றும் நீடித்திருக்கும் திறன் ஆகிய சோதனைகளை நடத்துவதற்கு இந்த ரயில் பாதை பயன்படுத்தப்பட உள்ளது. இந்த பாதையில் ஒரு மணி நேரத்திற்கு 220 கிலோ மீட்டர் வேகம் வரை ரயில்களை இயக்கலாம் என்று கணிக்கப்பட்டுள்ளது.
ஆய்வுத் திறனை மேம்படுத்துவதிலும், புதிய வடிவமைப்புகளை எளிதில் அமல்படுத்துவதற்கும் இந்த சோதனைப் பாதை மிகவும் முக்கியப் பங்கு வகிக்கும் என்று ரயில்வே அதிகாரிகள் கருதுகின்றனர். இத்திட்டம் நவீனமயமாக்குதல், அதிவேகம், மேம்படுத்தப்பட்ட பயணியர் சௌகரியம் ஆகியவற்றோடு பாதுகாப்புக்கு முன்னுரிமை கொடுப்பதையும் வெளிப்படுத்துகிறது.
இது தவிர, ராஜஸ்தான் மாநிலத்தில் ரயில்வே அமைப்பை மேம்படுத்துவதற்கு பெரிய அளவிலான தொகையை இந்திய ரயில்வே தொடர்ந்து முதலீடு செய்து வருகிறது. 25 கிலோ மீட்டர் தொலைவு உள்ள உம்ரா – டெபாரி ரயில் பிரிவை இரட்டிப்பாக்குவதற்கு 492 கோடி ரூபாய் தொகையை ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் அங்கீகரித்துள்ளார். முக்கியமான சுற்றுலா தளமாக இருக்கும் உதய்பூரில் ரயில் கூட்ட நெரிசல்களை தவிர்ப்பதற்கும், ரயில் தொடர்பை மேம்படுத்துவதற்கும் இந்த திட்டம் அமல்படுத்தப்பட உள்ளது.


