Last Updated:
2025ல் சவுதி அரேபியாவில் இருந்து 11000, அமெரிக்காவில் இருந்து 3800 இந்தியர்கள் நாடு கடத்தப்பட்டனர்; மியான்மரில் சைபர் குற்றங்களில் சிக்கிய 1591 பேர் திரும்பினர்.
நடப்பாண்டு சவுதி அரேபியாவில் இருந்து அதிக அளவிலான இந்தியர்கள் நாடு கடத்தப்பட்டு இருப்பதாக மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
நடப்பு 2025-ஆம் ஆண்டில், 81 நாடுகளில் இருந்து சுமார் 25 ஆயிரம் பேர் இந்தியாவிற்கு நாடு கடத்தப்பட்டு இருப்பதாக மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் குறிப்பிட்டுள்ளது. அதில், அதிகபட்சமாக, சவுதி அரேபியாவில் இருந்து 11,000 பேர் இந்தியாவிற்கு நாடு கடத்தப்பட்டதாக கூறப்பட்டுள்ளது. காலாவதியான விசா, குற்ற வழக்குகளில் சிக்குதல் ஆகிய காரணங்களால் சவுதியில் இருந்து 11,000 பேர் நாடு கடத்தப்பட்டதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
இதே போன்று, அமெரிக்காவில் இருந்து நடப்பாண்டில் 3,800 இந்தியர்கள் நாடு கடத்தப்பட்டுள்ளனர். அவர்களில் பெரும்பாலானவர்கள் தனியார் நிறுவன ஊழியர்கள் என்றும், டிரம்ப் ஆட்சிக்கு வந்த பிறகு கொண்டு வந்த கடுமையான குடியேற்ற சட்டத்தால் பாதிக்கப்பட்டவர்கள் எனவும் மத்திய அரசு தெரிவித்துள்ளது.
கடந்த 5 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு, நடப்பாண்டில் அதிக அளவிலான இந்தியர்கள் நாடு கடத்தப்பட்டு இருப்பதாகவும் வெளியுறவுத்துறை குறிப்பிட்டுள்ளது. அண்டை நாடான மியான்மரில் சைபர் குற்றங்களில் ஈடுபடுத்த அடிமைகளாக சிக்கி இருந்த 1591 இந்தியர்கள் நடப்பாண்டில் தாயகம் திரும்பி இருப்பதாகவும் மத்திய அரசு தெரிவித்துள்ளது.
Dec 27, 2025 12:06 PM IST


