பெட்டாலிங் ஜெயா:
இந்த மாத தொடக்கத்தில் பிளாட் ஸ்ரீ பெரந்தாவ் (Flat Seri Perantau) அடுக்குமாடி குடியிருப்பின் மின் விநியோக அறையில் ஏற்பட்ட தீ விபத்தால் பாதிக்கப்பட்ட குடியிருப்பாளர்களுக்கு, தெனாகா நேஷனல் பெர்ஹாட் (TNB) தற்காலிக மின்சார வசதியை வழங்கியுள்ளது.
இருப்பினும், முழுமையான சீரமைப்புப் பணிகளை மேற்கொள்வது கட்டிட நிர்வாகத்தின் பொறுப்பு என்று TNB தெளிவுபடுத்தியுள்ளது.
கடந்த டிசம்பர் 7-ஆம் தேதி, அடுக்குமாடி குடியிருப்பின் மின் விநியோகப் பலகை (DB) அறையில் தீ விபத்து ஏற்பட்டது.
இதனால் பிளாக் C-இல் உள்ள 128 வீடுகள் கடந்த இரண்டு வாரங்களுக்கும் மேலாக மின்சாரம் இன்றி தவித்து வருகின்றன. மின்சாரம் இல்லாததால் மின்தூக்கிகள் (Lifts) மற்றும் தண்ணீர் பம்புகள் செயலிழந்து குடியிருப்பாளர்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது.
குடியிருப்பாளர்களின் சிரமத்தைக் கருத்தில் கொண்டு, டிசம்பர் 17 முதல் சில வீடுகளுக்கு TNB தற்காலிக மின்சாரத்தை வழங்கியுள்ளது.
கட்டிட நிர்வாகத்தால் மேற்கொள்ளப்படும் முழுமையான பழுதுபார்ப்புப் பணிகள் முடிந்து, அது பாதுகாப்பானது எனச் சான்றளிக்கப்பட்டவுடன், நிரந்தர மின் இணைப்பை வழங்கத் தயாராக இருப்பதாக TNB தெரிவித்துள்ளது.
விபத்தில் சேதமடைந்த உள் வயரிங் கட்டமைப்பைச் சீரமைக்க சுமார் RM1.7 மில்லியன் செலவாகும் என மதிப்பிடப்பட்டுள்ளது.
இது தொடர்பாக இறுதி முடிவெடுக்க சிலாங்கூர் மாநில அரசு வரும் டிசம்பர் 29-ஆம் தேதி (திங்கட்கிழமை) ஒரு முக்கிய ஆலோசனைக் கூட்டத்தை நடத்தவுள்ளது குறிப்பிடத்தக்கது.




