Last Updated:
உத்தரபிரதேச சம்பல் பகுதியில் ராகுல் தனது மனைவி ரூபி மற்றும் கெளரவ் மூலம் கொலை செய்யப்பட்டு, உடல் கிரைண்டரில் அரைக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
கிரைண்டரில் அரைத்து சிதைக்கப்பட்ட நிலையில் கண்டெடுக்கப்பட்ட ஆணின் உடல் பாகங்களால் உத்தரப்பிரதேச மாநிலத்தில் பெரிய பரபரப்பு ஏற்பட்டது.
உத்தரபிரதேசத்தின் சம்பல் பகுதியில் கடந்த 15ஆம் தேதி சந்தௌசி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் துண்டாக்கப்பட்ட மனித உடல் பாகங்களை காவல்துறையினர் கண்டெடுத்தனர். உடல் பாகங்களை கொண்டு இறந்தவரை அடையாளம் காண முடியாமல் தவித்த காவல்துறையினர், இறுதியாக ’ராகுல்’ என டாட்டூ குத்தப்பட்ட கையை கண்டுபிடித்தனர்.
இதைத் தொடர்ந்து, கடந்த 18ஆம் தேதி தனது கணவர் ராகுலை காணவில்லை என ரூபி என்பவர் புகார் அளித்திருந்தது தெரியவந்தது. விசாரணையின்போது ரூபி முன்னுக்குப் பின் முரணாக பதிலளிப்பதை உணர்ந்த காவல்துறையினர், தனது காதலனுடன் சேர்ந்து கணவரை கொலை செய்ததை கண்டறிந்தனர்.
ராகுல் – ரூபி தம்பதிக்கு 15 ஆண்டுகளுக்கு முன் திருமணமான நிலையில், 12 வயது மகன், 10 வயது மகள் இருக்கின்றனர். மகளிடம் நடத்திய விசாரணையில் மூன்று பேர் அடிக்கடி வீட்டிற்கு வந்து சென்றதாகவும், சில சமயங்களில் சாக்லேட்டுகளை வழங்கியதாகவும் கூறியுள்ளார்.
இதையடுத்து, ரூபி தனது காதலன் கௌரவ் உடன் சேர்ந்து கணவரை கொலை செய்து, உடலை சிறு சிறு துண்டுகளாக வெட்டி, கிரைண்டரில் அரைத்து பாலித்தீன் பைகள் மூலம் பல்வேறு பகுதிகளில் வீசியது அம்பலமானது.
கொலைக்கான தடயங்களான சுத்தி, கிரைண்டர், பாலித்தீன் பைகள் உள்ளிட்டவற்றை பறிமுதல் செய்த காவல்துறையினர், ரூபி, கௌரவ் ஆகியோரை கைது செய்தனர். ராகுல் வீட்டினுள் கொலை செய்யப்பட்டதாகவும், பின்னர் உடல் துண்டு துண்டாக வெட்டப்பட்டு வெவ்வேறு இடங்களில் வீசப்பட்டதாகவும் தடயவியல் குழுக்கள் சந்தேகிக்கின்றன. காணாமல் போன ராகுலின் தலை மற்றும் பிற உடல் பாகங்களை மீட்க போலீசார் தொடர்ந்து முயற்சித்து வருகின்றனர்.
கிரைண்டரில் அரைத்து வீசப்பட்ட ஆணின் உடல் பாகங்கள்.. காட்டிக்கொடுத்த ‘டாட்டூ’ – குழந்தைகள் வாக்குமூலத்தில் வெளிவந்த உண்மை!


