Last Updated:
ரூபாய் மதிப்பு வீழ்ச்சியால் செல்போன்கள், ஏர் கண்டிஷனர்கள், மெர்சிடிஸ், பிஎம்டபிள்யூ, ஆடி கார்கள் உள்ளிட்ட இறக்குமதி பொருட்கள் விலை அதிகரிக்கும் அபாயம் உருவாகியுள்ளது.
அமெரிக்க டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு வீழ்ச்சியடைவதால் செல்போன்கள், தொலைக்காட்சி பெட்டிகள், மடிக்கணினிகள், ஏர் கண்டிஷனர்கள், குளிர்சாதன பெட்டிகள், மின்சார வாகனங்களின் விலை அதிகரிக்கும் அபாயம் எழுந்துள்ளது.
இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்கள் மீது அமெரிக்க அதிபர் டிரம்ப் கடந்த ஆகஸ்ட் மாதம் 50 விழுக்காடு வரி விதித்ததில் இருந்து டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு தொடர்ந்து சரிவை சந்தித்து வருகிறது. வெளிநாட்டு முதலீட்டாளர்கள் இந்தியாவில் இருக்கும் தங்களது முதலீடுகளை வேறு நாடுகளுக்கு மாற்றி வருகின்றனர்.
தங்கம் மற்றும் கச்சா எண்ணெய் இறக்குமதி காரணமாகவும் அதிகளவு டாலர்கள் இந்தியாவில் இருந்து வெளியே செல்கின்றன. வெளியே செல்லுமளவிற்கு, ஏற்றுமதி மூலம் இந்தியாவிற்கு டாலர்கள் வரவில்லை. இதன்காரணமாக ரூபாய் மதிப்பு தொடர்ந்து வீழ்சியடைந்து வருகிறது. இந்த ஆண்டு மட்டும் ரூபாய் மதிப்பு 5 விழுக்காட்டுக்கு மேல் சரிந்து 90 ரூபாய் 47 காசுகள் என்ற வரலாறு காணாத வீழ்ச்சியை சந்தித்தது.. இது கடந்த மூன்று ஆண்டுகளில் இல்லாத வீழ்ச்சியாக பார்க்கப்படுகிறது.
பண மதிப்பு வீழ்ச்சியடைந்து வருவதால் அனைத்து இறக்குமதி பொருட்களும் விலையேற்றத்தை சந்திக்கும் அபாயம் எழுந்துள்ளது. குறிப்பாக மக்கள் அன்றாடம் பயன்படுத்தும் செல்போன்கள், தொலைக்காட்சி பெட்டிகள், மடிக்கணினிகள், ஏர் கண்டிஷனர்கள், குளிர்சாதன பெட்டிகள், வாஷிங்மெஷின், வாகனங்கள் போன்ற பொருட்களின் விலையில் தாக்கத்தை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த பொருட்களுக்கு தேவையான கம்ப்ரசர்கள், கன்ட்ரோலர்கள், சிப்கள் உள்ளிட்டவை பெரும்பாலும் வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்படுகின்றன.
ரூபாய் மதிப்பு வீழ்ச்சியால் இவற்றின் விலை அதிகரித்துள்ளதாகவும், இதன்காரணமாக ஏர்கண்டிஷனர்கள் விலை 7 விழுக்காடு வரையிலும், குளிர்சாதன பெட்டிகள் விலை 5 விழுக்காடு வரையிலும் உயர்த்தப்படலாம் என்று கூறப்படுகிறது. ஸ்மார்ட்போன்கள் விலை ஐந்தாயிரம் ரூபாய் வரை அதிகரிக்கக்கூடும் என்று செல்போன் தயாரிப்பு நிறுவனங்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பண மதிப்பு வீழ்ச்சியால் ஆட்டோமொபைல் துறையும் கடுமையாக பாதிப்பை சந்தித்துள்ளது. மெர்சிடிஸ், பிஎம்டபிள்யூ, ஆடி போன்ற முன்னணி கார் தயாரிப்பு நிறுவனங்கள் நடப்பாண்டில் ஏற்கனவே விலை உயர்வை அறிவித்திருந்தன. தற்போது ரூபாய் மதிப்பு வீழ்ச்சியால் சொகுசு கார்கள் விலையை மீண்டும் உயர்த்துவது பற்றி பரிசீலித்து வருகின்றன. டாலரை போன்றே யூரோவுக்கு நிகரான ரூபாய் மதிப்பும் வரலாறு காணாத வீழ்ச்சியடைந்திருப்பதால் வரும் ஜனவரி முதல் கார்கள் விலையை உயர்த்த உள்ளதாக பிஎம்டபிள்யூ நிறுவனம் அறிவித்துள்ளது.
இதேபோன்று மெர்சிடிஸ் நிறுவனமும் ஜனவரி முதல் கார்கள் விலையை உயர்த்துவது பற்றி பரிசீலித்து வருகிறது. ரூபாய் மதிப்பு சரிவடைவது நாட்டின் பொருளாதாரத்திற்கு உகந்தது இல்லை என்றாலும் பின்னலாடை, மருந்துகள், மென்பொருள் ஏற்றுமதி செய்யும் நிறுவனங்களுக்கு கணிசமான பலன் கிடைக்கும் வாய்ப்பு உள்ளது.
December 12, 2025 7:00 AM IST
ரூபாய் மதிப்பு வீழ்ச்சி.. டிவி, லேப்டாப், செல்போன் உள்ளிட்ட பொருட்களின் விலை உயரும் அபாயம்


