Last Updated:
சென்னையில் நடைபெற்ற ஜூனியர் ஹாக்கி உலகக் கோப்பை தொடரில் அர்ஜெண்டினாவை வீழ்த்தி இந்திய அணி வெண்கலப் பதக்கம் வென்றது.
சென்னையில் நடைபெற்ற ஜூனியர் ஹாக்கி உலகக் கோப்பை தொடரில், ஸ்பெயினை வீழ்த்தி 8வது முறையாக ஜெர்மனி வெற்றி பெற்றது. மற்றொரு போட்டியில் அர்ஜெண்டினாவை வீழ்த்தி இந்திய அணி வெண்கலப் பதக்கம் வென்றது.
14வது ஜூனியர் உலகக் கோப்பை ஹாக்கி தொடர் சென்னை மற்றும் மதுரையில் நடைபெற்றது. 24 அணிகள் பங்கேற்ற இந்த தொடரில் சென்னை மேயர் ராதாகிருஷ்ணன் மைதானத்தில் நடைபெற்ற இறுதிப் போட்டியில் நடப்பு சாம்பியன் ஜெர்மனி, ஸ்பெயினை எதிர்கொண்டது.
ஆட்டத்தின் 26வது நிமிடத்தில் ஜெர்மனி வீரர் ஜஸ்டஸ் கோல் அடித்து தனது அணியை முன்னிலைப் பெற செய்தார். எனினும், 33வது நிமிடத்தில் ஸ்பெயின் வீரர் மஸ்டரோஸ் நிகோலஸ் பதில் கோல் அடிக்க ஆட்டத்தில் அனல் பற்றிக் கொண்டது.
நிர்ணயிக்கப்பட்ட ஒரு மணி நேரத்தில் இரு அணிகளும் மேற்கொண்டு கோல் ஏதும் அடிக்காத நிலையில், தங்கப் பதக்கத்தை தீர்மானிப்பதற்கு சூட் அவுட் முறை கடைப்பிடிக்கப்பட்டது. இதில் 3-2 என்ற கோல் கணக்கில் வென்ற ஜெர்மனி 8வது முறையாக ஜூனியர் உலகக் கோப்பை வசப்படுத்தியது.
முன்னதாக நடைபெற்ற மூன்றாவது இடத்திற்கான போட்டியில் இந்திய இளம்படை அர்ஜெண்டினாவை எதிர்கொண்டது. ஆட்டத்தின் 3வது நிமிடத்தில் இந்திய வீரர் செய்த தவறால் வழங்கப்பட்ட பெனால்டி ஸ்ட்ரோகை பயன்படுத்தி, கோல் அடித்த அர்ஜெண்டினா, 44வது நிமிடத்தில் மற்றொரு கோல் அடித்தது.
உள்ளூர் ரசிகர்களின் ஆதரவை பெற்ற இந்திய அணி வெகுண்டு எழுந்து கடைசி 15 நிமிடங்களில் கோல் மழை பொழிந்தது. அடுத்தடுத்து 4 கோல்கள் அடித்த இந்திய அணி, வெண்கலப் பதக்கத்தை வசப்படுத்தியது. கோப்பையை வென்ற ஜெர்மனி கோப்பையுடன் தங்கப் பதக்கமும், ஸ்பெயினுக்கு வெள்ளிப் பதக்கமும், இந்தியாவுக்கு வெண்கலப் பதக்கமும் வழங்கப்பட்டன…
Chennai,Tamil Nadu
December 11, 2025 7:20 AM IST


