Last Updated:
“வந்தே மாதரத்தை தற்போதைய வடிவில் ஏற்றுக்கொள்ள எதிர்க்கட்சிகள் தயாராக உள்ளோம்” என மக்களவையில் ஆ. ராசா தெரிவித்தார்.
இந்தியாவின் தேசியப் பாடலான ‘வந்தே மாதரம்’ பாடலின் 150 ஆண்டுகள் நிறைவடைவது குறித்து இன்று (டிசம்பர் 8) மக்களவையில் சிறப்பு விவாதம் நடைபெற்றது. இந்த விவாதத்தில் பங்கேற்ற பிரதமர் நரேந்திர மோடி, “வந்தே மாதரம் ஊக்குவித்த சுதந்திரப் போராட்டத்தால் நாம் இன்று சுதந்திரமாக இங்கு அமர்ந்திருக்கிறோம். ஆகவே இந்த விவகாரத்தில் எதிர்க்கட்சி மற்றும் ஆளும் கூட்டணி என்றெல்லாம் இல்லை.
நமது போர் முழக்கத்தின் அடிப்படையாக இருந்தது வந்தே மாதரம். வந்தே மாதரத்தின் 100வது ஆண்டு என்பது இந்தியாவின் அவசர காலம் அமல்படுத்தப்பட்ட காலத்தில் வந்தது. வந்தே மாதரத்தின் 100வது ஆண்டு விழா கொண்டாடப்பட்டபோது இந்தியாவின் ஜனநாயகம் மழுங்கடிக்கப்பட்டிருந்தது. ஆனால் இந்த 150வது ஆண்டு இந்தியாவின் சுயசார்பு காலத்தில் கொண்டாடி வருகிறோம்.
ஆங்கிலேயர்கள் காலத்தில் இங்கிலாந்து ராணியை கடவுள் காப்பாற்ற வேண்டும் என்ற பாடலை தான் இந்தியர்கள் பாட வேண்டும் என்று நிர்பந்தித்தார்கள். ஆனால் அந்த நேரத்தில் தான் வந்தே மாதரம் பாடல் அவர்களுக்கு தக்க பதிலடி கொடுத்தது” என பேசியிருந்தார்.
இந்நிலையில், வந்தேமாதரம் பாடல் மீதான விவாதத்தில் பேசிய திமுக எம்.பி. ஆ. ராசா, “பிரிவுபட்டிருந்த நாட்டை ஒருங்கிணைக்க தேசிய கீதம் தேவைப்பட்டது. வந்தே மாதரத்தை தற்போதைய வடிவில் ஏற்றுக்கொள்ள எதிர்க்கட்சிகள் தயாராக உள்ளோம். வந்தே மாதரத்தை எழுதிய பங்கிம் சந்திர சாட்டர்ஜிக்கு எவ்வாறு அரசியல் ஆக்கப்படும் என தெரிந்திருக்காது” எனத் தெரிவித்தார்.
December 08, 2025 4:08 PM IST


