Last Updated:
பிரதமர் நரேந்திர மோடி எந்த வித வெளிப்புற அழுத்தத்திற்கும் அடிபணிய மாட்டார் என்று ரஷ்ய அதிபர் புதின் புகழாரம் சூட்டியுள்ளார்.
இந்திய பயணத்திற்கு முன்பாக மாஸ்கோவில் ஆங்கில செய்தி நிறுவனத்திற்கு பேட்டியளித்த புதின், அமெரிக்க அதிபர் டிரம்ப் நல்லெண்ணத்தின் அடிப்படையிலேயே வர்த்தக வரிகளை விதிப்பதாகத் தெரிவித்தார். ரஷ்யாவிடம் இருந்து இந்தியா கச்சா எண்ணெய் வாங்குவது குறித்த டிரம்பின் விமர்சனத்திற்கு பதிலளித்த அவர், அமெரிக்காவே அதன் சொந்த அணுமின் நிலையங்களுக்காக ரஷ்யாவிடம் இருந்து அணுசக்தி பொருட்களை வாங்கி வரும் நிலையில், இந்தியாவிற்கும் அதே சலுகை அளிப்பதில் என்ன தவறு என்று வினவினார்.
இந்தியா – ரஷ்யா இணைந்து செயல்படுவது அமெரிக்கா உட்பட எந்த நாட்டிற்கும் எதிரானது அல்ல என்று விளக்கமளித்த புதின், தானும், பிரதமர் மோடியும் எந்த வித வெளிப்புற அழுத்தத்திற்கும் அடிபணிந்ததில்லை என்று திட்டவட்டமாகத் தெரிவித்தார்.
இந்தியாவும், ரஷ்யாவும் தங்களது சொந்த நலன்களை பாதுகாப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளதாகவும், எந்த நாட்டிற்கும் தீங்கு இழைக்க மாட்டோம் என்றும் புதின் கூறினார். இந்நிலையில், புதினின் இந்திய பயணத்தை வரவேற்று எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள பிரதமர் மோடி, இந்தியா – ரஷ்யா இடையிலான நட்புறவு இருநாட்டு மக்களுக்கும் மகத்தான நன்மைகளை கொடுத்திருப்பதாக ரஷ்ய மொழியில் குறிப்பிட்டுள்ளார்.
இதனிடையே இன்று காலை குடியரசுத் தலைவர் மாளிகையில் புதினுக்கு சிவப்பு கம்பள வரவேற்பு அளிக்கப்படுகிறது. அதன்பின் அங்கிருந்து ராஜ்காட்டில் உள்ள மகாத்மா காந்தி சமாதிக்கு செல்லும் புதின், மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்துகிறார். இதைத் தொடர்ந்து டெல்லியில் உள்ள ஹைதராபாத் இல்லத்தில் நடைபெறும் உச்சி மாநாட்டில் புதின் பங்கேற்கிறார்.
அப்போது ராணுவம், எரிசக்தி, வர்த்தகம் உள்ளிட்ட துறைகளில் முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. ரஷ்யாவுடனான வர்த்தக பற்றாக்குறையை களையும் வகையில் இந்தியாவில் இருந்து ரஷ்யாவிற்கு ஏற்றுமதியை அதிகரிப்பது குறித்து விவாதிக்கப்படும் என்று கூறப்படுகிறது. குறிப்பாக மருந்து, ஆட்டோமொபைல், வேளாண் பொருட்களை அதிகளவில் ஏற்றுமதி செய்வது குறித்து பேசப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ரஷ்யாவிடம் இருந்து, எஸ்-400 ரக வான் பாதுகாப்பு ஏவுகணை அமைப்பை கூடுதலாக கொள்முதல் செய்வது, SU-57 போர் விமானங்களை இந்தியாவிற்கு விநியோகிப்பது குறித்து பேசப்படலாம் என்று தெரிகிறது. உச்சி மாநாடு நிறைவடைந்த பின், குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு அளிக்கும் விருந்திலும் புதின் கலந்து கொள்கிறார். அதன்பின், இரவு 9 மணிக்கு புறப்பட்டு மீண்டும் மாஸ்கோ செல்கிறார்.
December 05, 2025 7:23 AM IST


