Last Updated:
உச்சநீதிமன்றம், SIR பணிச்சுமையால் பாதிக்கப்பட்ட தேர்தல் அலுவலர்களை விடுவித்து மாற்ற நியமிக்கலாம் என அறிவுறுத்தி, தமிழ்நாடு வழக்கை விரைவில் விசாரிக்க உத்தரவிட்டது.
வாக்காளர் சிறப்பு தீவிர திருத்தப் பணியில் தேர்தல் அலுவலர்கள் பணிச் சுமையால் பாதிக்கப்பட்டால், அவர்களை விடுவித்துவிட்டு வேறு நபர்களை நியமிக்கலாம் என்று உச்சநீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.
வாக்காளர் சிறப்பு தீவிர திருத்தத்துக்கு எதிரான வழக்குகள் உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுதாரர்கள் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் கோபால் சங்கரநாராயணன், எஸ்ஐஆர் பணிச்சுமையால் பலர் உயிரிழந்துள்ளதாக தெரிவித்தார். இயலாதவர்களை பணியில் இருந்து விடுவிக்க தேர்தல் ஆணையம் மறுப்பதாகவும் குற்றஞ்சாட்டப்பட்டது.
உத்தரப்பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களுக்கு 2027 ஆம் ஆண்டுதான் தேர்தல் வரும் நிலையில், 2 மாதங்களில் எஸ்ஐஆர் பணிகளை முடிக்க வேண்டும் என்று கட்டாயப்படுத்துவது ஏன் என மூத்த வழக்கறிஞர் கபில் சிபல் வாதிட்டார். அவசர கதியில் எஸ்ஐஆர் பணிகளை முடிக்க அறிவுறுத்தாமல், ஆறு, ஏழு மாதங்கள் வழங்க வேண்டும் என்றும் கோரினார்.
இதற்கு பதிலளித்த தேர்தல் ஆணையம், ஒரு வாக்கு சாவடியில், அதிகபட்சமாக 1200 வாக்காளர் மட்டுமே உள்ளதால் பணிச்சுமை எதுவும் இல்லை என்றும் இது ஜோடிக்கப்பட்ட கருத்து என்றும் வாதிட்டது. தமிழ்நாட்டில் 91% SIR பணிகள் முடிவடைந்து விட்டதாகவும் தேர்தல் ஆணையம் தெரிவித்தது.
இதனைத் தொடர்ந்து பேசிய நீதிபதிகள், தனிப்பட்ட காரணங்களுக்காக விலக்கு கோரும் அதிகாரிகளிடம் உரிய விசாரணை நடத்தி அவரை விடுவித்து வேறொரு நபரை நியமிக்கலாம் என உத்தரவிட்டனர். கர்ப்பிணிப் பெண்கள் உள்ளிட்ட முடியாத நபர்களை மாநில அரசுகள் தேர்தல் பணிகளுக்கு வழங்காமல் இருக்கலாம் என்றும் அறிவுறுத்தினர்.
பணி நேரத்தை குறைக்கும் வகையில், கூடுதல் ஊழியர்களை பணியில் அமர்த்தவும் நீதிபதிகள் உத்தரவிட்டனர். தமிழ்நாடு வழக்கை உடனே விசாரிக்க வேண்டும் என்று திமுக கோரிய நிலையில், பிகாரில் நடத்தப்பட்ட எஸ்ஐஆருக்கு எதிரான வழக்கு முடிந்த உடன் விசாரணைக்கு எடுக்கப்படும் என்று நீதிபதிகள் தெரிவித்தனர்.
Delhi,Delhi,Delhi
December 04, 2025 3:32 PM IST


