மலேசியாவுடன் சுகாதார ஒத்துழைப்பு, போதைப் பொருளுக்கு எதிரான புரிந்துணர்வு ஒப்பந்தங்களும் கையெழுத்து
சிங்கப்பூர், டிசம்பர் 4:
கிழக்கு மலேசிய மாநிலங்களான சாபா மற்றும் சரவாக்கில் புதிய துணைத் தூதரகங்களைத் திறக்க சிங்கப்பூருக்கு மலேசியா அனுமதி அளித்துள்ளது என சிங்கப்பூர் பிரதமர் Lawrence Wong வியாழக்கிழமை அறிவித்தார்.
இந்த அறிவிப்பு, 12வது சிங்கப்பூர்–மலேசியத் தலைவர்கள் ஓய்வுத்தளச் சந்திப்புக்காக சிங்கப்பூர் வந்துள்ள மலேசியப் பிரதமர் Anwar Ibrahim உடன் நடைபெற்ற கூட்டு செய்தியாளர் சந்திப்பின் போது வெளியிடப்பட்டது. “சாபா, சரவாக்கில் துணைத் தூதரகங்களைத் திறக்கும் திட்டத்திற்கு மலேசியா ஒப்புதல் அளித்திருப்பதில் நான் மகிழ்ச்சியடைகிறேன். இது அந்த மாநிலங்களில் வசிக்கும் சிங்கப்பூரர்களுக்குத் தேவையான தூதரகச் சேவைகளை வழங்குவதோடு, இருநாட்டு மக்களிடையேயான உறவுகளையும் வலுப்படுத்தும்,” என அவர் தெரிவித்தார்.
இந்தத் திட்டம், ஜனவரி 2025ல் புத்ராஜெயாவில் நடைபெற்ற முந்தைய தலைவர்கள் சந்திப்பின்போதும் விவாதிக்கப்பட்டதாகவும் அவர் நினைவூட்டினார். தற்போது மலேசியாவில் சிங்கப்பூருக்கு இரண்டு தூதரகங்கள் உள்ளன. ஒன்று கோலாலம்பூரில் உள்ள தூதரகம்; மற்றொன்று, 2009ல் ஜோகூர் பாருவில் திறக்கப்பட்ட துணைத் தூதரகம் ஆகும்.
இதற்கிடையில், இருநாடுகளும் சுகாதார ஒத்துழைப்பு மற்றும் போதைப் பொருள் தடுப்பு தொடர்பான இரண்டு புரிந்துணர்வு ஒப்பந்தங்களைப் பரிமாறிக் கொண்டன. போதைப் பொருள் கடத்தல், உற்பத்தி மற்றும் சட்டவிரோத வலையமைப்புகளை இலக்காகக் கொண்டு தகவல் பகிர்வையும் நடவடிக்கைகளையும் ஒருங்கிணைப்பதற்கான ஒப்பந்தத்தில் சிங்கப்பூரின் தேசிய பாதுகாப்பு ஒருங்கிணைப்பு மற்றும் உள்துறை அமைச்சர் K. Shanmugam மற்றும் மலேசிய உள்துறை அமைச்சர் Saifuddin Nasution கையெழுத்திட்டனர்.
மேலும், சுகாதாரத் துறையில் ஊட்டச்சத்து மேம்பாடு, முதியோருக்கான நீண்டகால பராமரிப்பு மற்றும் மருத்துவ ஆராய்ச்சி போன்ற துறைகளில் இணைந்த செயல்பாடுகள் மேற்கொள்ளவும் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. ஒப்பந்தப் பரிமாற்ற நிகழ்ச்சி ரிட்ஸ்-கார்ல்டன், மில்லினியா சிங்கப்பூர் ஹோட்டலில் நடைபெற்றது.




