Last Updated:
பீகார் மேற்கு சம்பாரனில் மணமகன் கண் குறைபாட்டை மறைத்ததால், மணமகள் திருமணத்தை ரத்து செய்தார். வாக்குவாதம், போலீசார் தலையீடு, பஞ்சாயத்து கூட்டம் நடந்தது.
ஆயிரம் பொய் சொல்லியாவது திருமணத்தை நடத்துங்கள் என பெரியவர்கள் சொல்வதுண்டு. ஆனால் அதெல்லாம் பழைய காலம், இன்று ஒரே ஒரு பொய் கூறியதால் சந்தோஷமாக நடைபெற இருந்த திருமணம் பாதியிலேயே நின்று போயுள்ளது. பீகார் மாநிலம் மேற்கு சம்பாரனில் நடைபெற இருந்த திருமணத்தில், மணமகனிடம் கண் குறைபாடு இருப்பதை மணமேடையில் வைத்து மணமகள் கண்டுபிடித்ததால் திருமணம் பாதியிலேயே நின்று போனது.
இது மணமக்கள் பெற்றோர்களுக்கு மட்டுமல்லாமல் திருமணத்திற்கு வந்திருந்த உறவினர்கள் மற்றும் நண்பர்கள் இடையேயையும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதோடு இரு வீட்டாருக்கும் இடையே கடும் வாக்குவாதம் நடைபெற்ற நிலையில், காவல்துறை வந்து சமாதானம் செய்தது. இறுதியில் மணமகன் வெறும் கையோடு வீடு திரும்பும் நிலை ஏற்பட்டது.
பீகாரின் மேற்கு சம்பாரனில் கொண்டாட்ட நாளாக இருக்க வேண்டிய புதன்கிழமை, தற்போது சோக காட்சியாக மாறியுள்ளது. கிராமத்தில் உள்ள அரங்கம் அலங்கரிக்கப்பட்டு, மேள தாளத்துடன், உறவினர்கள் புடை சூழ, மணமகன் ஆடம்பரமாக வந்தார். ஆனால் அவர் மண்டபத்திற்குள் நுழைந்ததும் கொண்டாட்டங்கள் ஸ்தம்பித்தன. மணமகன் தனது கண் குறைபாட்டை மறைக்க கண்ணாடி அணிந்தபடி மணமேடையில் அமர்ந்திருந்துள்ளார். இதை கண்டுபிடித்த மணமகள், அடுத்த நொடியே சறும் யோசிக்காமல் திருமணத்தை ரத்து செய்தார்.
ஒரு கண்ணில் பார்வை குறைபாடு கொண்ட மணமகன், அதை யாரும் கவனிக்கக்கூடாது என்பதற்காக கண்ணாடி அணிந்திருந்தார். ஆனால் சடங்குகள் தொடங்கியதும், உண்மை வெளிச்சத்திற்கு வந்தது. இதைக்கண்டு கோபமடைந்த மணமகள், “பொய் கூறிய” மணமகனை தான் திருமணம் செய்துகொள்ளப் போவதில்லை என்று அனைவர் முன்னும் அறிவித்தார். இதனால் அவரது உறவினர்கள் பதற்றமடைந்ததோடு, மணமகனின் தரப்பும் அதிர்ச்சியடைந்தது. அடுத்த சில நிமிடங்களுக்குள் திருமணம் மண்டபம் குழாயடி சண்டை நிகழும் இடமாக மாறியது. நேரம் செல்ல செல்ல வாக்குவாதம் முற்றி மோதலுக்கு வழிவகுத்தது. இறுதியில் நிலைமையைக் கட்டுப்படுத்த போலீசார் தலையிட வேண்டியிருந்தது.
இதைத் தொடர்ந்து பிரச்சனையை தீர்த்து வைக்க கிராமப் பஞ்சாயத்து கூட்டம் கிட்டத்தட்ட இரண்டு மணி நேரம் நடைபெற்றது. மணமகளின் சகோதரர் மணப்பெண்ணின் முடிவை முழுமையாக ஆதரித்ததோடு, இன்னும் எத்தனை உண்மைகளை மறைத்து வைத்துள்ளார்களோ எனக் கூறி இனி இந்த திருமணம் தொடர முடியாது என்று கூறினார்.
இறுதியில் ஆடம்பரத்துடனும் உற்சாகத்துடனும் வந்திருந்த மணமகன், மணமகள் இல்லாமல் வீடு திரும்ப வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. திருமணத்தில் நேர்மை என்பது அத்தியாவசியம் மட்டுமல்ல, இது பல சங்கடமான சூழலில் இருந்து காப்பாற்றக்கூடும் என்பதை உள்ளூர்வாசிகள் பலருக்கும் நினைவூட்டலாக இந்த மோதல் இருந்தது. ஆகவே இளைஞர்களே, இன்றைய காலத்து பெண்களை சாதாரணமாக நினைக்காதீர்கள்.
November 28, 2025 3:43 PM IST


