Last Updated:
பிகார் தேர்தலில் தேசிய ஜனநாயகக் கூட்டணி 200 இடங்களுக்கு மேல் முன்னிலை, பாஜக 91, ஐக்கிய ஜனதா தளம் 81, தேஜஸ்வி சொந்த தொகுதியில் பின்னடைவு.
பிகார் சட்டமன்றத் தேர்தலில் ஆளும் தேசிய ஜனநாயகக் கூட்டணி அறுதிப்பெரும்பான்மையுடன் ஆட்சியை தக்க வைக்கிறது. மகாகத்பந்தன் கூட்டணி கடும் பின்னடைவை சந்தித்துள்ளது.
243 தொகுதிகளைக் கொண்ட பிகார் சட்டப்பேரவைக்கு இரண்டு கட்டங்களாக நடைபெற்ற தேர்தலில் பதிவான வாக்குகள், இன்று காலை 8 மணி முதல் எண்ணப்பட்டு வருகின்றன. வாக்கு எண்ணிக்கை தொடங்கியது முதலே ஆளும் தேசிய ஜனநாயகக் கூட்டணி முன்னிலை வகித்து வருகிறது. ஆட்சியமைக்க 122 தொகுதிகள் தேவைப்படும் சூழலில், தேசிய ஜனநாயகக் கூட்டணி தற்போதைக்கு 200 இடங்களுக்கு மேல் முன்னிலை வகித்து வருகிறது.
தேசிய ஜனநாயகக் கூட்டணியில் பாஜக மட்டும் 91 இடங்களில் முன்னிலை பெற்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ளது. நிதிஷ் குமார் தலைமையிலான ஐக்கிய ஜனதா தளம் கட்சி 81 இடங்களிலும், சிராக் பஸ்வான் தலைமையிலான லோக் ஜனசக்தி கட்சி 22 இடங்களிலும் முன்னிலை பெற்றுள்ளது.
ஜித்தன் ராம் மஞ்சியின் இந்துஸ்தானி அவாமி மோர்ச்சா கட்சி 5 இடங்களிலும், உபேந்திர குஷ்வாகாவின் ராஷ்ட்ரிய லோக் மோர்ச்சா கட்சி 3 இடங்களிலும் முன்னிலை வகித்தது.
அதேநேரம், தேஜஸ்வி தலைமையிலான மகாகத்பந்தன் கூட்டணி 39 இடங்களில் மட்டும் முன்னிலை பெற்று கடும் பின்னடைவை சந்தித்துள்ளது. ராஷ்ட்ரிய ஜனதா தளம் கட்சி 29 இடங்களில் முன்னிலை பெற்றுள்ளது. 20 இடங்களில் போட்டியிட்ட சிபிஐ மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட் கட்சி 5 இடங்களிலும், 61 இடங்களில் போட்டியிட்ட காங்கிரஸ் வெறும் 4 இடங்களிலும் மட்டும் முன்னிலை வகித்தன. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஒரு இடத்தில் மட்டும் முன்னிலை பெற்றது.
238 இடங்களிலும் தனித்துப் போட்டியிட்ட தேர்தல் வியூக வகுப்பாளர் பிரசாந்த் கிஷோரின் ஜன் சுராஜ் கட்சி தொடக்கத்தில் சில இடங்களில் முன்னிலை வகித்த நிலையில், நண்பகலுக்கு மேல் அனைத்து இடங்களிலும் பின்னடைவை சந்தித்தது. ஓவைசியின் அகில இந்திய மஜ்லிஸ் கட்சி 4 இடங்களிலும், பகுஜன் சமாஜ் கட்சி 1 இடத்திலும் முன்னிலை வகித்தன.
மகாகத்பந்தன் கூட்டணியின் முதலமைச்சர் வேட்பாளரான தேஜஸ்வி தனது சொந்த தொகுதியான ரகோபூரில் கடும் போட்டியை சந்தித்துள்ளார். லக்கிசராய் தொகுதியில் பாஜக சார்பில் களமிறங்கிய துணை முதலமைச்சர் விஜய் குமார் சின்ஹாவும், தாராபூர் தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிட்ட துணை முதலமைச்சர் சாம்ராட் சவுத்ரியும் முன்னிலை பெற்றுள்ளனர். இதேபோன்று பாஜக வேட்பாளரும், நாட்டுப்புற பாடகியுமான மைதிலி தாகூர் அலிநகர் தொகுதியில் முன்னிலை வகிக்கிறார்.
தேசிய ஜனநாயகக் கூட்டணி மீண்டும் ஆட்சியமைக்கும் நிலையில், மாநிலம் முழுவதும் பாஜக மற்றும் ஐக்கிய ஜனதாதளம் கூட்டணிக் கட்சியினர் கொண்டாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். பாட்னாவில் பாஜக தொண்டர்கள் மேள தாளம் முழங்க நடனமாடி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். இதேபோன்று, பாட்னாவில் ஐக்கிய ஜனதா தளம் கட்சியினர் பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கி நடனமாடி கொண்டாடினர்.
November 14, 2025 2:53 PM IST


