ஐபிஎல் தொடரின் இன்றைய லீக் போட்டியில் பெங்களூரு அணியும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் பலபரிட்சை நடத்தவிருக்கின்றன. ஏற்கனவே ராஜஸ்தான் ராயல்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் உள்ளிட்ட அணிகள் பிளேஆஃப் சுற்றுக்கு தகுதி பெற்ற நிலையில், இன்று நடைபெறும் போட்டி கிட்டத்தட்ட கால் இறுதி போட்டியாகவே உருவெடுத்துள்ளது.
மிக முக்கியமாக பார்க்கப்படும் இந்த போட்டியில் மழை குறுக்கிடலாம் என வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. அப்படி நிகழ்ந்தால், பிளேஆஃப்ஸ் சுற்றுக்கு யார் முன்னேறுவார்கள் என்ற கணக்கையும் போடத்தொடங்கியுள்ளார்கள் ரசிகர்கள்.
இந்தப் போட்டியில் மழை குறுக்கிடாமல் இருந்தால், சென்னை அணி வென்றாலே போதும், பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறிவிடலாம். ஆனால் பெங்களூரு அணி வென்றால் மட்டும் போதாது. முதலில் பேட்டிங் செய்து 200 ரன்களைக் குவித்து 18 ரன்கள் வித்தியாசத்தில் சென்னையை வீழ்த்த வேண்டும். இரண்டாவதாக பேட்டிங் செய்தால் 18.1 ஓவரிலேயே வெற்றிக்கனியை பறிக்க வேண்டும் என்ற கணக்கு ஏற்கனவே சொல்லப்பட்டது.
இந்நிலையில், மழை குறுக்கிட்டு, போட்டியின் ஓவர்கள் குறைக்கப்பட்டாலும், பெங்களூரு அணி அதே போல 18 ரன்கள் வித்தியாசத்தில் தான் வெற்றி பெற வேண்டும். உதாரணத்திற்கு, 15 ஓவர்களாக போட்டி குறைக்கப்பட்டால், பெங்களூரு அணி 190 ரன்கள் எடுக்கிறது என்று வைத்துக்கொள்வோம். 191 ரன்கள் இலக்காக வைத்து களமிறங்கும் சென்னை அணியை 172 ரன்களுக்குள் பெங்களூரு அணி ஆட்டமிழக்க செய்ய வேண்டும் அல்லது அந்த ஸ்கோரை 13.1 ஓவர்களில் சேஸ் செய்ய வேண்டும்.
10 ஓவர்கள் போட்டி என்றால், உத்தேசமாக பெங்களூரு அணி 140 ரன்கள் எடுக்கிறது என்று வைத்துக்கொள்வோம். 141 ரன்கள் இலக்காக வைத்து களமிறங்கும் சென்னை அணியை 122 ரன்களுக்குள் பெங்களூரு அணி ஆட்டமிழக்க செய்ய வேண்டும் அல்லது அந்த ஸ்கோரை 8.1 ஓவர்களில் சேஸ் செய்ய வேண்டும்.
அதே போல தான் 5 ஓவர்கள் போட்டியிலும், பெங்களூரு அணி 90 ரன்கள் எடுக்கிறது என்று வைத்துக்கொள்வோம். 91 ரன்கள் இலக்காக வைத்து களமிறங்கும் சென்னை அணியை 72 ரன்களுக்குள் பெங்களூரு அணி ஆட்டமிழக்க செய்ய வேண்டும் அல்லது அந்த ஸ்கோரை 3.1 ஓவர்களில் சேஸ் செய்ய வேண்டும்.
ஒருவேளை மழையால் போட்டி ஒரு பந்து கூட வீசப்படாமல் ரத்தானால், சென்னை அணி பிளேஆஃப் சுற்றுக்கு தகுதி பெற்றுவிடும். இப்படி இருக்கும் நிலையில், போட்டியில் மழை குறுக்கிடக்கூடாது என கிரிக்கெட் ரசிகர்கள் வேண்டிக்கொண்டிருக்கிறார்கள்.
இந்த போட்டியில் சென்னை அணி தோல்வியடைந்தால், சென்னை அணிக்கு இந்த போட்டி தான் கடைசி போட்டியாக இருக்கும். அப்படியானால், தோனிக்கும் இது கடைசி ஐபிஎல் போட்டியாக அமைந்துவிடும். கடைசி சீசனில் தோனியை கோப்பையுடன் வழியனுப்பும் ரசிகர்களின் ஆசையும் நிறைவேறாமல் சென்றுவிடும்.
அதேபோல பெங்களூரு அணி தோல்வியடைந்தால், விராட் கோலியும் தனது முதல் ஐபிஎல் கோப்பைக்காக இன்னும் ஒரு வருடம் காத்திருக்கும் நிலை வரும். எனவே பெங்களூரு ரசிகர்களும் இந்த போட்டியில் நிச்சயம் வென்றாகவேண்டும் என காத்திருக்கிறார்கள். யாருடைய ஆசை நிறைவேறும் என்று இன்று இரவு தெரிந்துவிடும்.
.
&w=750&resize=750,375&ssl=1)
