2015ஆம் ஆண்டில் இந்தியாவின் காசநோய் தாக்கம், ஒரு லட்சம் மக்களுக்கு 237 வழக்குகள் என்று இருந்த நிலையில், 2024ஆம் ஆண்டில் இது 187 வழக்குகளாக கணிசமாகக் குறைந்துள்ளது. இது 21% சரிவைக் குறிக்கிறது, உலகளாவிய சராசரியான 12% உடன் ஒப்பிடுகையில் இரட்டிப்பாகக் குறைந்துள்ளது.
உலக சுகாதார அமைப்பின் அறிக்கை, புதிய தொழில்நுட்ப வருகைகள், பரவலாக்கப்பட்ட சிகிச்சை வசதிகள், சமூக ஈடுபாட்டைக் கொண்ட தேசிய அளவிலான முயற்சிகள் ஆகியவற்றால் காசநோயைக் குறைப்பதில் இந்தியா அதிக செயல்திறன் கொண்ட நாடு என மதிப்பிடப்பட்டுள்ளது.
பல முன்னேற்றங்கள் இருந்தபோதிலும், உலகளாவிய காசநோய் சுமையில் கால் பங்கு (25%) இந்தியாவில் உள்ளது. இந்தோனேசியா, பிலிப்பைன்ஸ், சீனா, பாகிஸ்தான், நைஜீரியா, காங்கோ ஜனநாயகக் குடியரசு, வங்கதேசம் ஆகிய நாடுகளுடன் சேர்ந்து, உலக காசநோய் பாதிப்புகளில் 67%-க்கு காரணமான முதல் 8 நாடுகளில் இந்தியாவும் ஒன்றாகும்.
2024ஆம் ஆண்டில் உலக காசநோய் இறப்புகளில் 28% மற்றும் பல மருந்துகளுக்கு எதிர்ப்பு கொண்ட காசநோய் (MDR/RR-TB) நோயாளிகளில் 32%ஆகவும் இந்தியா இருந்துவந்துள்ளதாக உலக சுகாதார அமைப்பின் மதிப்பீடு தெரிவிக்கிறது. உலகத்தில் இருக்கும் இப்படிப்பட்ட கடினமான காசநோய் நோயாளிகளில் பாதிக்கும் மேற்பட்டவர்கள் இந்த 4 நாடுகளைச் சேர்ந்தவர்கள் ஆவர்.
இந்தியா – 32% (உலகம் முழுக்க MDR-TB நோயாளிகளில் மூன்றில் ஒரு பங்கு இந்தியாவில்தான்)
சீனா – 7.1%
பிலிப்பைன்ஸ் – 7.1%
ரஷ்யா – 6.7%
காசநோய் இறப்புகளில் மூன்றில் இரண்டு பங்கு ஆப்பிரிக்கா மற்றும் தென்கிழக்கு ஆசியாவில், அதாவது HIV இல்லாதவர்களில் ஏற்பட்ட காசநோய் மரணங்களில் 69% ஆப்பிரிக்கா மற்றும் தென்கிழக்கு ஆசியாவில் நடந்துள்ளதாக அறிக்கை கூறுகிறது. இதில் இந்தியா மட்டும் 28% காசநோய் இறப்புகளுக்கு காரணமாக இருப்பதாகவும் உலக சுகாதார அமைப்பின் அறிக்கை தெரிவிக்கிறது.
உலக சுகாதார அமைப்பு தனது சமீபத்திய அறிக்கையில், இந்தியாவின் புதுமையான காசநோய் (TB) கண்டுபிடிப்பு முறைகள் உலகளவில் சிறந்த முன்னுதாரணமாக உள்ளன என்று குறிப்பிட்டுள்ளது. காசநோயை வேகமாக கண்டறிந்து, உடனடியாக சிகிச்சைக்கு இணைக்கும் இந்தியாவின் அணுகுமுறை சிறப்பாக செயல்பட்டு வருவதாக WHO தெரிவித்துள்ளது. அறிக்கை, இந்தியா காசநோய் கண்டறிதலில் பயன்படுத்தும் மூன்று முக்கிய புதுமையான முயற்சிகளை சிறப்பாக எடுத்துக் காட்டுகிறது:
- மூலக்கூறு நோயறிதல் கருவிகளின் விரிவான பயன்பாடு
- டிஜிட்டல் கண்காணிப்பு
- சமூக அடிப்படையிலான திரையிடல்
இதன் விளைவாக:
- சிகிச்சை கிடைக்கும் விகிதம் 2015இல் 53%இல் இருந்து, 2024இல் 92%ஆக உயர்ந்தது.
- 2024இல் மதிப்பிடப்பட்ட 27 லட்சத்தில் 26.18 லட்சம் வழக்குகள் கண்டறியப்பட்டன.
- “காணாமல் போன வழக்குகள்” 2015இல் 15 லட்சத்தில் இருந்து 2024இல் 1 லட்சத்திற்கும் குறைவானது.
- காசநோய் முக்த் பாரத் அபியான் திட்டத்தின் கீழ், இந்தியாவின் சிகிச்சை வெற்றி விகிதம் 90%, இது உலக சராசரி 88%ஐ விட அதிகமாகும்.
உலக சுகாதார அமைப்பு, இந்தியாவின் முன்னேற்றத்தைப் பாராட்டியிருந்தாலும்,
- சமூக மற்றும் பொருளாதார தடைகள்
- சில பகுதிகளில் சுகாதார அணுகல் குறைபாடு
- MDR-TB தொடர்ந்து அதிகம் இருப்பது போன்ற காரணங்கள் இந்தியாவின் காசநோய் ஒழிப்பு இலக்கை மெதுவாக்கக் கூடியவையாக இருப்பதாக எச்சரித்துள்ளது.
கோவிட் காலத்தில் ஏற்பட்ட சுகாதார அமைப்பின் இடையூறுகள் காரணமாக, உலகளவில் காசநோய் பாதிப்பு நான்காவது ஆண்டாக உயர்வு கண்டுள்ளதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. எனவே, காசநோயை ஒழிக்க உலக நாடுகளுக்கு அதிக முதலீடுகளும், வலுவான சுகாதார அமைப்புகளும் அவசியம் என்றும் WHO வலியுறுத்துகிறது.
November 14, 2025 6:55 PM IST

