தோக்கியோ:
ஜப்பானின் புதிய பிரதமர் சானே தகாய்ச்சி, கடுமையான உழைப்பாளி என அறியப்படுபவர். அவர் சமூக நிகழ்வுகளில் பங்கேற்பதைத் தவிர்ப்பதோடு, வேலை–வாழ்க்கை சமநிலை என்ற கருத்தை வெளிப்படையாக நிராகரிப்பவருமாவார்.
அவரின் இந்த தன்மை மீண்டும் ஒரு விவாதத்தை கிளப்பியது. நவம்பர் 7ஆம் தேதி நாடாளுமன்ற நிகழ்வுக்கு முன் பதில்கள் மற்றும் ஆவணங்களைத் திருத்துவதற்காக, அதிகாலை 3 மணிக்குப் பிறகு தனது உதவியாளர்களுடன் கூட்டத்தை நடத்த வீட்டிலிருந்து வெளியேறிய காட்சிகள் ஊடகங்களில் வெளியாகின.
இந்த சந்திப்பு ஜப்பானிய ஊடகங்களில் “காலை 3 மணி ஆய்வு அமர்வு” என பரவலாக விமர்சிக்கப்பட்டது. காரணம் – ஜப்பானில் வேலைப் பளுவால் ஏற்படும் மரணம், கரோஷி, இன்னும் உணர்வுபூர்வமான பிரச்சினையாகவே உள்ளது.
அதிகாலை 3 மணிக்கு தொடங்கிய இந்தக் கூட்டத்தில் பல உதவியாளர்கள் பங்கேற்றனர். அது சுமார் மூன்று மணி நேரம் நீடித்ததாக கூறப்படுகிறது. இது ஊழியர்களை ஆரோக்கியமற்ற அளவிற்கு உழைக்கச் செய்கிறதே என பலர் கடும் எதிர்ப்பை தெரிவித்துள்ளனர்.
ஜப்பானின் முன்னாள் பிரதமரும் தற்போதைய எதிர்க்கட்சி தலைவருமான யோஷிஹிகோ நோடா, தகாய்ச்சியின் இந்த முடிவை “பைத்தியக்காரத்தனம்” என்று நேரடியாக விமர்சித்தார்.
தான் பிரதமராக இருந்த காலத்தில் காலை 6 அல்லது 7 மணிக்கே வேலை தொடங்குவது வழக்கமென அவர் நினைவுப்படுத்தினார்.
நாடாளுமன்றத்தில் பேசும்போது தகாய்ச்சி, அதிகாலை கூட்டம் காரணமாக தனது ஊழியர்கள் சிரமப்பட வேண்டியிருந்ததை ஒப்புக்கொண்டார். ஆனால் நாடாளுமன்ற கேள்விகளுக்கான பதில்களை சரியாகத் தயாரிக்க அவசர திருத்தங்கள் செய்ய வேண்டியிருந்ததால், இத்தகைய நேரத்தில் சந்திப்பது “தவிர்க்க முடியாதது” என விளக்கினார்.
ஜப்பானில் வேலை நேரம் குறைவு மற்றும் ஊழியர் நலன் குறித்த விவாதங்கள் அதிகரித்துள்ள சூழலில்,
பிரதமர் தகாய்ச்சியின் இந்த அதிகாலை கூட்டம் புதிய அரசின் வேலை கலாச்சாரம் குறித்த கேள்விகளை எழுப்பியுள்ளது.




