Last Updated:
“நிதிஷ் குமாரின் கடைசித் தேர்தல் என்பதாலும், ரூ.1 லட்சத்து 90 ஆயிரம் கிடைக்கும் என்பதாலும், பெண்கள் அவரை நம்பினார்கள் என்று தோன்றுகிறது” என மகாகத்பந்தனின் துணை முதல்வர் வேட்பாளர் முகேஷ் சாஹ்னி தெரிவித்துள்ளார்.
பீகார் சட்டமன்றத்தில் 234 தொகுதிகளுக்கு இரண்டு கட்டங்களாக தேர்தல் நடந்து முடிந்ததைத் தொடர்ந்து, பதிவான வாக்குகள் இன்று எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன.
இதில் என்.டி.ஏ. கூட்டணி 126 தொகுதிகளில் வெற்றி பெற்றும், 78 தொகுதிகளில் முன்னிலையும் வகித்து வருகிறது. அதேபோல், மகாகத்பந்தன் கூட்டணி 19 தொகுதிகளில் வெற்றி பெற்றும், 15 தொகுதிகளில் முன்னிலையும் வகித்து வருகிறது. ஆட்சி அமைக்கத் தேவையான 122 தொகுதிகளுக்கு மேலாக மொத்தம் 204 தொகுதிகளில் என்.டி.ஏ. கூட்டணி முன்னிலையில் இருந்து வருகிறது. இதன் மூலம், பீகாரில் மீண்டும் என்.டி.ஏ. கூட்டணி ஆட்சி அமைப்பது உறுதியாகியுள்ளது.
இந்நிலையில், மகாகத்பந்தனின் துணை முதல்வர் வேட்பாளரும், விஐபி கட்சியின் தலைவருமான முகேஷ் சாஹ்னி தேர்தல் முடிவுகள் குறித்து ஏ.என்.ஐ. செய்தி நிறுவனத்திற்கு பேட்டி அளித்துள்ளார்.
அந்தப் பேட்டியில், முகேஷ் சாஹ்னி கூறுகையில், “மக்கள் முடிவை நாங்கள் ஏற்று, என்.டி.ஏ.வுக்கு எங்கள் வாழ்த்தைத் தெரிவித்துக்கொள்கிறோம். இவ்வளவு பெரிய வெற்றியைப் பெறுவார்கள் என நாங்கள் ஒருபோதும் எதிர்பார்க்கவில்லை. அதேசமயம், விரைவில் இதற்குப் பின்னால் இருக்கும் காரணங்களை நாங்கள் ஆய்வு செய்வோம்.
#WATCH | Patna | On NDA heading towards a landslide victory in #BiharElection2025, VIP chief and Mahagathbandhan’s Dy CM face Mukesh Sahni says, “For now, we accept this mandate… We congratulate the NDA… We never imagined that they would win in such a way… We will further… pic.twitter.com/ObagSZ4uae
— ANI (@ANI) November 14, 2025
முதல் பார்வையில், அனைத்து சாதி மற்றும் மதங்களைச் சேர்ந்த பெண்களும் நிதிஷ் குமாரின் கடைசித் தேர்தல் என்பதாலும், மேலும் ரூ.1 லட்சத்து 90 ஆயிரம் கிடைக்கும் என்ற செய்தி மக்களைச் சென்றடைந்ததாலும் அவரை நம்பினார்கள் என்று தோன்றுகிறது.
இந்த உலகில் எப்போதும் பணம் ஆதிக்கம் செலுத்தும். கடந்த காலத்தில், ஏழை மக்கள் தங்கள் வாக்குகளை விற்று வந்தனர். இரவின் இருட்டில், செல்வந்தர்களும் அதிகாரம் மிக்கவர்களும் பணத்தை விநியோகித்து மக்கள் தீர்ப்பைத் திருடினர். நாங்கள் மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தியுள்ளோம். அவர்கள் இனி இரவில் தங்கள் வாக்குகளை விற்க மாட்டார்கள்.
தற்போது பழைய நடைமுறை மாறியுள்ளது. சட்டவிரோத நடவடிக்கைகள் பகல் நேரத்தில் பகிரங்கமாக நடக்கின்றன. மக்கள் ரூ. 10,000 மற்றும் 1 லட்சத்து 90 ஆயிரத்திற்காக தங்கள் வாக்குகளைச் செலுத்தியுள்ளனர். ஆனால், வேலைவாய்ப்பின்மை உள்ளிட்ட ஆயிரம் பிரச்சனைகளை நிராகரித்துள்ளனர். மக்கள் மற்றும் பெண்களின் முடிவுகளை நான் வணங்குகிறேன். இதில் எந்தக் கருத்தும் கிடையாது” எனத் தெரிவித்துள்ளார்.
November 14, 2025 6:23 PM IST
“நிதிஷின் கடைசித் தேர்தல்… ரூ. 2 லட்சத்திற்காக வாக்களித்த பெண்கள்” – எதிர்க்கட்சி துணை முதல்வர் வேட்பாளர்


