கைது செய்யப்பட்ட பிரித்தானிய முன்னாள் இளவரசர் ஆண்ட்ரூ மவுண்ட்பேட்டன் வின்ட்சர், 11 மணி நேர விசாரணைக்குப் பின் விடுவிக்கப்பட்டுள்ளார்.
சிறுமிகள் மற்றும் இளம்பெண்களைப் பாலியல் வன்கொடுமை செய்து, பல்வேறு நபர்களுக்கு அவர்களை விருந்தாக்கியதாகத் தெரிவிக்கப்படும் ஜெப்ரி எப்ஸ்டீன், கடந்த 2019இல் உயிரிழந்தார்.
இந்தநிலையில், அவர் தொடர்பான ஆவணங்கள் வெளியாகி உலகையே உலுக்கி வருகின்றன.
ரகசிய ஆவணங்கள்
இச்சூழ்நிலையில், ஜெப்ரிக்குச் சர்வதேச அளவில் முக்கிய புள்ளிகளுடன் தொடர்பு இருந்தது கண்டுபிடிக்கப்பட்டதால், தற்போது அவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
அந்த வரிசையில், பிரிட்டனின் மன்னர் மூன்றாம் சார்லசின் இளைய சகோதரரும், முன்னாள் இளவரசருமான ஆண்ட்ரூ மவுண்ட்பேட்டன் வின்ட்சர் கைது செய்யப்பட்டார்.

எப்ஸ்டீன் ஆவணங்களின்படி, ஆண்ட்ரூ 2001 – 2011 வரை பிரித்தானிய அரசின் வர்த்தகத் தூதராகப் பணியாற்றிய போது, ரகசிய ஆவணங்களை எப்ஸ்டீனுக்கு அனுப்பியதற்கான சாட்சியங்கள் உள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
இதையடுத்து, தேம்ஸ் வேலி காவல்துறையினர், 66ஆவது பிறந்த நாளைக் கொண்டாடிக்கொண்டிருந்த ஆண்ட்ரூவைக் கைது செய்தனர்.
மீண்டும் கைது
ஏற்கனவே எப்ஸ்டீன் உடனான தொடர்புகளால் சர்ச்சையில் சிக்கியிருந்த ஆண்ட்ரூவின் இளவரசர் மற்றும் டியூக் ஆப் யார்க் போன்ற அரசப் பட்டங்கள் பறிக்கப்பட்டன.
இந்தநிலையில், முன்னாள் இளவரசர் ஆண்ட்ரூ மீது இதுவரை குற்றச்சாட்டு பதிவு செய்யப்படாத நிலையில், 11 மணி நேர விசாரணைக்குப் பின் காவல்துறையினர் அவரை விடுவித்துள்ளனர்.

மேலும், பெர்க்ஷயர் மற்றும் நார்போக் பகுதிகளில் உள்ள ஆண்ட்ரூவின் வீடுகளில் சோதனை தொடர்கிறது.
விசாரணையும் தொடர்ந்து நடைபெற்று வருவதால், அவர் மீண்டும் கைது செய்யப்படலாம் எனத் தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்…! |

