சிகாமாட், பிப்ரவரி 21, 2026:
ஜோகூர், சிகாமாட் பகுதியில் உள்ள ஒரு சிறிய வாய்க்காலில் அடையாளம் தெரியாத மூதாட்டி ஒருவரின் உடல் நேற்று கண்டெடுக்கப்பட்டது. இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கம்போங் தெங்கா (Kampung Tengah) போக்குவரத்து சமிக்ஞை சந்திப்பிற்கு அருகிலுள்ள வாய்க்காலில் நேற்று காலை 11.40 மணியளவில் குறித்த உடல் கண்டெடுக்கப்பட்டது. அப்பகுதி வழியாகச் சென்ற பொதுமக்கள் இதைப் பார்த்து போலீசாருக்குத் தகவல் கொடுத்தனர் என்று, சிகாமாட் மாவட்ட போலீஸ் தலைவர் சூப்ரிண்டெண்டன் முகமது ஜுமாசான்சாஹிர் செக் இஸ்மாயில் தெரிவித்துள்ளார்.
உயிரிழந்தவருக்குச் சுமார் 60 வயது இருக்கலாம் என நம்பப்படுகிறது. அவரிடம் அடையாள ஆவணங்கள் (IC) எதுவும் இல்லாததால், அவரது முழு விபரங்களை உறுதி செய்வதில் சிக்கல் நீடிக்கிறது.
முதற்கட்ட சோதனையில், அவரது உடலில் எவ்விதக் காயங்களோ அல்லது குற்றச் செயல்களுக்கான அறிகுறிகளோ காணப்படவில்லை என்று போலீசார் தெரிவித்தனர்.
சம்பவ இடத்திற்கு விரைந்த சிகாமாட் மருத்துவமனை அதிகாரிகள், அந்தப் பெண் உயிரிழந்ததை உறுதிப்படுத்தினர். அவரது உடல் பிரேதப் பரிசோதனைக்காக மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளது.
உயிரிழந்தவரின் குடும்பத்தினர் அல்லது அவரைப் பற்றிய தகவல்கள் தெரிந்தவர்கள் சிகாமாட் போலீஸ் நிலையத்தைத் தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.




