முலான்பூர்: நடப்பு ஐபிஎல் சீசனில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிரான லீக் போட்டியில் 2 ரன்களில் தோல்வியை தழுவியது பஞ்சாப் கிங்ஸ் அணி. 183 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை விரட்டிய அந்த அணி, 20 ஓவர்களில் 180 ரன்களை எடுத்திருந்தது.
இதில் கடைசி 5 ஓவர்களில் 75 ரன்களை குவித்திருந்தது பஞ்சாப். ஹைதராபாத் அணிக்கு கடைசி ஓவர் வரையில் பயம் காட்டி இருந்தனர் பஞ்சாப் அணி வீரர்களான அஷுதோஷ் சர்மா மற்றும் ஷஷாங்க் சிங். இருவரும் 7-வது விக்கெட்டுக்கு 66 ரன்கள் சேர்த்திருந்தனர். 11, 17, 11, 10 மற்றும் 26 ரன்களை கடைசி 5 ஓவர்களில் பஞ்சாப் அணி எடுத்திருந்தது.
இதில் அஷுதோஷ் சர்மா 15 பந்துகளில் 33 ரன்கள் எடுத்தார். ஷஷாங்க் சிங் 25 பந்துகளில் 46 ரன்கள் எடுத்திருந்தார். குஜராத் அணிக்கு எதிரான போட்டியிலும் இதே கூட்டணி சிறப்பாக பேட் செய்து பஞ்சாப் அணியை வெற்றி பெற செய்தது.
இந்த சீசனில் 5 போட்டிகளில் விளையாடி 2 வெற்றிகளை பெற்றுள்ளது பஞ்சாப். இதில் டெல்லி, பெங்களூரு, குஜராத் மற்றும் ஹைதராபாத் அணிகளுக்கு எதிரான போட்டி இறுதி ஓவர் வரை ஆட்டம் சென்றிருந்தது. டெல்லி மற்றும் குஜராத் அணிக்கு எதிராக அணி கடைசி ஓவரில் த்ரில் வெற்றி பெற்றுள்ளது பஞ்சாப்.
ஆட்டத்தில் சுவாரஸ்யம் சேர்க்கும் வகையில் பஞ்சாப் அணியின் அணுகுமுறை இந்த சீசனில் இருப்பதை பார்க்க முடிகிறது. சர்வதேச போட்டிகளில் விளையாடாத அஷுதோஷ் மற்றும் ஷஷாங்க் இணைந்து இந்த மேஜிக்கை அந்த அணிக்காக நிகழ்த்தி வருகின்றனர். அவர்கள் இருவரது ஆட்டமும் தங்களுக்கு நம்பிக்கை தரும் வகையில் அமைந்திருப்பதாக பஞ்சாப் அணியின் கேப்டன் ஷிகர் தவன் தெரிவித்துள்ளார்.