சிவகாசி: சிவகாசியில் உற்பத்தி செய்யப்பட்ட 2025-ம் ஆண்டுக்கான காலண்டர் வர்த்தகம் ரூ.400 கோடிக்கும் மேல் தாண்டியதால் உற்பத்தியாளர்கள் மகிழ்ச்சி அடைந்தனர். சிவகாசியில் பட்டாசு மற்றும் தீப்பெட்டி தொழிலுக்கு அடுத்து அச்சு தொழில் பிரதானமாக உள்ளது.
சிறிய மற்றும் பெரிய அளவிலான 800-க்கும் அதிகமான அச்சகங்களில் சீசன் அடிப்படையில் நோட்டுப் புத்தகங்கள், டைரிகள், காலண்டர்கள், வணிக நிறுவனங்களுக்கு தேவையான பில் புக், பேக்கிங் அட்டைகள், அழைப்பிதழ்கள், துண்டு பிரசுரங்கள் ஆகியவை அச்சடிக்கப்பட்டு வருகின்றன.
இதில் 50க்கும் மேற்பட்ட அச்சகங்கள் பிரத்யேகமாக காலண்டர் தயாரிப்பில் மட்டும் ஈடுபட்டு வருகின்றன. இங்கு தமிழ், ஆங்கிலம், மலையாளம் உட்பட பல மொழிகளில் காலண்டர்கள் உற்பத்தி செய்யப்படுகின்றன. தமிழகத்தில் உற்பத்தியாகும் மொத்த காலண்டரில் 90 சதவீதம் சிவகாசியில் உள்ள அச்சகங்களில் தான் உற்பத்தி செய்யப்படுகின்றன.
இந்த ஆண்டும் வழக்கம்போல் ஆடிப்பெருக்கு அன்று 2025-ம் ஆண்டுக்கான புதிய காலண்டர் ஆல்பம் வெளியிடப்பட்டு, உற்பத்தி பணிகள் தொடங்கின. தீபாவளிக்கு பின்னர் ஆர்டர்கள் அதிகரித்து, உற்பத்தி மும்முரமாக நடைபெற்றது. ரூ.400 கோடிக்கும் மேல் 2025-ம் ஆண்டுக்கான காலண்டர் வர்த்தகம் நடந்துள்ளதால் உற்பத்தியாளர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
இதுகுறித்து அச்சக உரிமையாளர்கள் கூறுகையில்: இந்த ஆண்டு தேர்தல் ஏதும் இல்லை. இதனால் அரசியல் கட்சியினர் ஆர்டர் 10 சதவீதம் குறைந்து விட்டது. உற்பத்தி செய்யப்பட்ட காலண்டர்களில் 90 சதவீதம் வரை விற்பனைக்கு அனுப்பப்பட்டு விட்டது. தொடர் மழை காரணமாக உற்பத்தி பாதிக்கப்பட்டதால் பொங்கல் பண்டிகை வரை காலண்டர் விநியோகம் செய்யப்படும். கடைசி நேரத்தில் பேப்பர் விலை குறைந்ததால் அதன் பலனை உற்பத்தியாளர்களும் வாடிக் கையாளர்களும் அனுபவிக்க முடியவில்லை என்றனர்.