புதுடெல்லி: இந்திய கிரிக்கெட் அணியின் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனான ரிஷப் பந்த் முழு உடற்தகுதியை அடைந்துவிட்டதாக பிசிசிஐ அறிவித்துள்ளது. இதைத் தொடர்ந்து அவர், ஐபிஎல் தொடரில் களமிறங்க உள்ளார். சுமார் 14 மாதங்களுக்குப் பிறகு ரிஷப் பந்த் மீண்டும் கிரிக்கெட் விளையாட உள்ளார்.
இந்திய கிரிக்கெட் அணியின் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனான ரிஷப் பந்த் கடந்த 2022-ம் ஆண்டு டிசம்பர் மாதம் உத்தராகண்ட் மாநிலம் ரூர்க்கியில் கார் விபத்தில் சிக்கினார். இதில் பலத்த காயம் அடைந்த அவர், பல்வேறு அறுவை சிகிச்சைகளுக்குப் பிறகு தற்போது முழுமையாக குணமடைந்துள்ளார்.
கடந்த சில மாதங்களாக பெங்களூருவில் உள்ள தேசிய கிரிக்கெட் அகாடமியில் சிகிச்சைக்கு பிந்தைய பயிற்சி முறைகளில் ஈடுபட்டு வந்தார் ரிஷப் பந்த். இந்நிலையில் வரும் 22-ம் தேதி தொடங்கும் ஐபிஎல் தொடரில் ரிஷப் பந்த் பேட்டிங் மற்றும் விக்கெட் கீப்பிங் செய்வதற்கான முழு உடற்தகுதியுடன் இருப்பதாக பிசிசிஐ நேற்று அறிவித்தது.
இதன் மூலம் 14 மாதங்களுக்குப் பிறகு ஐபிஎல் தொடரில் ரிஷப் பந்த் டெல்லி கேபிடல்ஸ் அணியின் கேப்டனாக திரும்ப உள்ளார்.
ஐபிஎல் 17-வது சீசன் போட்டிகள் வரும் 22-ம் தேதி சென்னையில் தொடங்குகின்றன. இந்த சீசனில் டெல்லி கேபிடல்ஸ் தனது முதல் ஆட்டத்தில் 23-ம் தேதி பஞ்சாப் கிங்ஸ் அணியுடன் பலப்பரீட்சை நடத்துகிறது.
இந்த ஆட்டத்தில் டெல்லி அணியானது ரிஷப் பந்த் தலைமையில் களமிறங்கக்கூடும். இந்த சீசனில் ரிஷப் பந்த் தாக்கத்தை ஏற்படுத்தக் கூடிய அளவிலான செயல் திறனை வெளிப்படுத்தும் பட்சத்தில் வரும் ஜூன் மாதம் அமெரிக்கா மற்றும் மேற்கு இந்தியத் தீவுகளில் நடைபெற உள்ள ஐசிசி டி 20 கிரிக்கெட் உலகக் கோப்பை தொடருக்கான இந்திய அணியில் இடம் பெறக்கூடும்.