மதுரை: மதுரை ‘மாஸ்டர் பிளான்’ திட்டத்தில் தொழிற்சாலை பகுதியாக அறிவிக்கப்பட்ட இடங்கள், தற்போது விவசாய பயன்பாடு மற்றும் வணிக பயன்பாட்டுக்காக மாற்றப்பட்ட நிலையில், நீக்கப்பட்ட அந்த சர்வே எண்களை மீண்டும் சேர்க்க, பாதிக்கப்பட்ட தொழிற்சாலை உரிமையாளர்களை மடீட்சியா அழைக்கிறது. அவற்றை அவர்கள் வழங்கும் பட்சத்தில் அவற்றை அறிக்கையாக தயார் செய்து அரசுக்கு வரும் 10-ம் தேதி தாக்கல் செய்ய உள்ளதாக அறிவித்துள்ளனர்.
மதுரை மாவட்டத்தில் ‘மாஸ்டர் பிளான்’ திட்டம் நிறைவேற்றப்படுகிறது. இந்த திட்டம் பற்றிய கருத்துக் கேட்பு கூட்டம், மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ளூர் திட்டக் குழுமம் சார்பில் துணை இயக்குநர் விளக்கத்துடன் கடந்த மார்ச் 6-ம் தேதி நடைபெற்றது. அதற்கு முன் ஏற்கெனவே, ஒரு தனியார் மண்டபத்தில் இக்கூட்டம் வெளியே தெரியாமல் நடத்தப்பட்டதாக எழுந்த குற்றச்சாட்டை தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வெளிப்படையாக இந்த கூட்டத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டது.
இக்கூட்டத்தில் மதுரை மாஸ்டர் பிளான் திட்டத்தில் ஏற்கெனவே தொழிற்சாலை பகுதியாக அறிவிக்கப்பட்ட இடங்களை, தற்போது விவசாய பயன்பாடு மற்றும் வணிக பயன்பாட்டுக்காக மாற்றப்பட்டது கண்டு தொழில்தறையினர் அதிர்ச்சி அடைந்தனர். அவற்றை மறுசீரமைப்பு செய்ய கூட்டத்தில் கலந்துகொண்டவர்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்த நிலையில், அதனை சரி செய்வதற்கு அரசு வரும் மே 10-ம் தேதி வரை அரசு கால அவகாசம் வழங்கியுள்ளது.
இது குறித்து மடீட்சியா சிறு, குறு தொழிற்சாலைகள் சங்கத் தலைவர் லெட்சுமி நாராயணன் கூறுகையில், “மாஸ்டர் பிளான் திட்டத்தில் குடியிருப்புகள், வணிக வளாகம், தொழிற்சாலைகள் மற்றும் வேளாண் நிலங்கள் ஒதுக்கப்பட்டதில் குளறுபடிகள் ஏற்பட்டுள்ளன. இந்த குறைபாடுகளுக்கு தீர்வு காணாமலே இந்த திட்டத்தால் மதுரை மாவட்டத்துக்கு எந்த முன்னேற்றும் ஏற்படப் போவதில்லை. இந்த திட்டத்தில் தொழிற்சாலை நிலங்களில் நீக்கப்பட்ட சர்வே எண்கள் இணக்கப்படும் பட்சத்தில் மதுரை மாவட்டம் தொழில்கள் உற்பத்தி திறனிலும், பொருளாதாரத்திலும் முன்னேறும் வாய்ப்பு பெறும்.
நிலவகைபாடு மாறி மாறி வரும் பட்சத்தில் தொழில் நிறுவனங்கள் தங்களது தொழிற்சாலைகளை விரிவாக்கம் செய்வதில் பல சிக்கல்கள் ஏற்படும் என்பதை எங்களது தொழிற்சாலை சங்கங்கள் அனைவராலும் ஆட்சேபனை தெரிவிக்கப்பட்டது. நீக்கப்பட்ட சர்வே எண்களில் மேலும் ஏதேனும் தொழிற்சாலை உள்ளதா என்பதை கண்டறியப்பட வேண்டும். ஏனெனில், ஏற்கெனவே தொழிற்சாலை இருக்கும் பட்சத்தில் நிலவகைபாடு மாற்றத்தினால் நடைபெறும் தொழில்கள் பல இன்னல்களுக்கு ஆளாகும் நிலை சிறு தொழில் நடத்துபவர்களுக்கு ஏற்படும் வாய்ப்பு உள்ளது. தொழிற்சாலை பகுதியாக ஏற்கெனவே அறிவிக்கப்பட்டுள்ள பல பகுதிகளில் அதிகமான சர்வே எண்கள் நீக்கப்பட்டுள்ளன.
அதனால், இது தொடர்பாக தொழிற்சாலை நில உரிமையாளர்கள் தங்கள் தொழிற்சாலைகளுக்கான நில வகைபாட்டில் மாற்றம் இருப்பின் அதை சரிசெய்வதற்காக வரும் 10.05.2024 வரை அரசு கால அவகாசம் வழங்கியுள்ளது. இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொண்டு தங்கள் தொழிற்சாலைகான நில வகைபாட்டை சரி செய்து கொள்ள நிலம் சம்பந்தமான பிரச்சனை உள்ள தொழில் அதிபர்கள் மடீட்சியாவை அணுக கேட்டுக் கொள்கிறோம். இது சம்பந்தமான சரியான விபரங்களை வரும் 10.05.2024 அரசுக்கு தாக்கல் செய்து உதவும் வகையில் மடீட்சியா செயல்பட்டு வருகிறது. அதனால், மாஸ்டர் பிளான் குறைபாடுகளால் பாதிக்கப்பட்டவர்கள் இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ளுங்கள்” என்றார்.