மும்பை: பேடிஎம் பேமென்ட்ஸ் (Paytm Payments) வங்கியின் நிர்வாக இயக்குநர் மற்றும் தலைமை செயல் அதிகாரியான சுரீந்தர் சாவ்லா ராஜினாமா செய்தார்.
இது தொடர்பாக ‘ஒன் 97’ (One97) கம்யூனிகேஷன்ஸ் இன்று (செவ்வாய்க்கிழமை) வெளியிட்டுள்ள அறிக்கையில், பேடிஎம் பேமன்ட்ஸ் பேங்க் லிட் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநரும் தலைமை நிர்வாக அதிகாரியுமான சுரீந்தர் சாவ்லா, தனிப்பட்ட காரணங்களுக்காகவும், சிறந்த தொழில் வாய்ப்புகளை ஆராய்வதற்காகவும் ஏப்ரல் 8, 2024 அன்று ராஜினாமா செய்தார். ஜூன் 26, 2024-ல் இருந்து அவர் விடுவிக்கப்படுவார்.
மார்ச் 1, 2024 அன்று நாங்கள் வெளியிட்ட அறிவிப்பின்படி, நிறுவனத்துக்கும், பேடிஎம் பேமென்ட்ஸ் வங்கிக்கும் இடையிலான கிட்டத்தட்ட அனைத்து ஒப்பந்தங்களும் நிறுத்தப்பட்டுள்ளன. பிப்ரவரி 26, 2024 அன்று நாங்கள் வெளியிட்ட தகவலின்படி, பேடிஎம் பேமன்ட்ஸ் பேங்க் லிட் நிறுவனத்தின் குழுவானது ஒரு தலைவர் உட்பட ஐந்து இயக்குநர்களுடன் மறுசீரமைக்கப்பட்டுள்ளது.
எங்களின் தொடர்ச்சியான முயற்சிகளுக்கு இணங்க, யுபிஐ சேவைகளை மேம்படுத்த நிறுவனம் வங்கிக் கூட்டாளர்களுடன் தொடர்ந்து ஒத்துழைத்து வருகிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
சுரிந்தர் சாவ்லா பேடிஎம் பேமன்ட்ஸ் பேங்க் லிட் நிறுவனத்தில் கடந்த ஆண்டு ஜனவரி மாதம் சேர்ந்தார். இந்நிலையில், இந்த வங்கி இந்திய ரிசர்வ் வங்கியின் தடை நடவடிக்கைக்கு உள்ளானது. இதனால், பேடிஎம் பேமன்ட்ஸ் வங்கி கடும் நெருக்கடிகளைச் சந்தித்தது. இந்த பின்னணியில், தற்போது அதன் நிர்வாக இயக்குநர் மற்றும் தலைமை செயல் அதிகாரியான சுரீந்தர் சாவ்லா ராஜினாமா செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.