புவி வெப்பமடைந்துவருவதால் ஏற்பட்டுவரும் பருவநிலை மாற்றத்தைக் கட்டுப்படுத்த உடனடி நடவடிக்கைகள் வேண்டும் எனக் கோரி ஞாயிறன்று உலகின் பல நகரங்களிலுமாக கிட்டத்தட்ட இரண்டாயிரம் பேரணிகள் நடத்தப்படவுள்ளன.
பட மூலாதாரம், AFP
பருவநிலை மாற்றம் காரணமாக கடல்நீர் மட்டமும் கடல் சீற்றமும் அதிகரித்து வருகிறது
நியுயார்க்கில் இன்னும் இரண்டு நாட்களில் பருவநிலை தொடர்பான உலக மாநாடு ஆரம்பிக்கவுள்ள சூழலில் இந்தப் பேரணிகள் நடக்கின்றன.
இந்த மாநாட்டில் உலக நாடுகளிடம் இருந்து உறுதியான நடவடிக்கைகள் அதிகம் வராது என்றே எதிர்ப்பார்க்கப்படுகிறது.
ஆனால் அடுத்த ஆண்டு இறுதியில் பாரீஸில் நடக்கவுள்ள உலக மாநாட்டில் பருவநிலை சம்பந்தமான ஒரு புதிய உலகளாவிய ஒப்பந்தத்தை எட்டுவதற்கான அரசியல் ஆதரவை ஒன்றுதிரட்ட முடியும் என்று தாம் நம்புவதாக சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் கூறுகின்றனர்.
இன்று நடப்பவற்றிலேயே மிகப் பெரிய ஊர்வலம் நியுயார்க்கில் நடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
பிரபலங்கள், தொழில்துறைத் தலைவர்கள் மற்றும் சுற்றுச்சூழல் ஆர்வலர்களோடு ஐநா தலைமைச் செயலர் பான் கி மூனும் நியுயார்க் ஊர்வலத்தில் பங்கேற்பார்.