மும்பை: இந்திய பங்குச் சந்தைகள் நேற்று வர்த்தகத்தின் இடையே புதிய உச்சத்தைத் தொட்டு சாதனை படைத்தன. சென்செக்ஸ் 76 ஆயிரம் புள்ளிகளை தொட்டது.
இந்திய பங்குச் சந்தைகள் தொடர்ந்து உயர்ந்து வருகின்றன. கடந்த வாரம் வர்த்தகத்தின் இடையே, தேசிய பங்குச் சந்தைகுறியீட்டெண் நிப்டி முதல் முறையாக 23 ஆயிரம் புள்ளிகளைத் தொட்டு சாதனை படைத்தது.
இந்நிலையில், நேற்றும் இந்திய பங்குச் சந்தைகள் உயர்வுடன் தொடங்கின. வர்த்தகத்தின் இடையே, மும்பை பங்குச் சந்தை குறியீட்டெண் சென்செக்ஸ் 76,000 புள்ளிகளையும் நிப்டி 23,100 புள்ளிகளையும் தாண்டி புதிய சாதனை படைத்தது. எனினும் அதன் பிறகுபங்குச் சந்தைகளில் சரிவு காணப்பட்டது. வர்த்தகத்தின் முடிவில், சென்செக்ஸ் 20 புள்ளிகள் சரிந்து 75,390-லும் நிப்டி 24 புள்ளிகள் சரிந்து 22,932-லும் நிலை பெற்றது.
வங்கி, ரியல் எஸ்டேட், ஐ.டி. துறை பங்குகள் 0.5% வரை உயர்ந்தன. எண்ணெய் எரிவாயு, எரிசக்தி, ஊடக துறை பங்குகள் 0.5 முதல் 1% வரை சரிந்தன.
டிவிஸ் லேப், இண்டஸ்இந்த் பாங்க், ஆக்சிஸ் பாங்க், எல்டிஐ மைன்ட்ரீ, அதானி போர்ட்ஸ் பங்குகள் உயர்ந்தன. அதானி எண்டர்பிரைசஸ், விப்ரோ, கிராசிம், ஓஎன்ஜிசி, எஸ்பிஐ லைப் பங்குகள் சரிந்தன.