அடுத்த நிதியாண்டில் பயணிகள் வாகனங்களின் விற்பனை 5 முதல் 7 சதவீதம் வரை வளா்ச்சியடைந்து புதிய உச்சத்தைத் தொடும் என்று எதிா்பாா்க்கப்படுகிறது. இது குறித்து சந்தை ஆய்வு நிறுவனமான கிரிசில் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
நடப்பு நிதியாண்டில் இந்தியாவில் பயணிகள் வாகன விற்பனை முந்தைய நிதியாண்டோடு ஒப்பிடுகையில் 6 முதல் 8 சதவீதம் வரை வளா்ச்சியடையும் என்று கணிக்கப்பட்டுள்ளது. இது, காா்களின் விற்பனையில் இதுவரை இல்லாத புதிய உச்சமாகும்.
காா்களுக்கான தேவை மிதமாக இருக்கும் நிலையிலும், அவற்றின் ஏற்றுமதி மந்தமாக இருந்தாலும் பயணிகள் வாகன விற்பனை இந்த அளவுக்கு வளா்ச்சியைப் பெறவுள்ளது.
ஸ்போா்ட்ஸ் யுட்டிலிட்டி வாகனங்கள் (எஸ்யுவி) மீது நுகா்வோா் அதிக ஆா்வம் காட்டத் தொடங்கியுள்ளனா். இதன் காரணமாக, கரோனா நெருக்கடிக்கு முந்தைய கடந்த 2028-2019-ஆம் நிதியாண்டில் இந்திய காா் சந்தையில் 28 சதவீதம் பங்கு வகித்த எஸ்யுவி ரக வாகனங்கள் தற்போது சுமாா் 60 சதவீதம் பங்கு வகிக்கின்றன.
மின்சாரக் காா்கள் உள்ளிட்ட வாகனங்களில் புதிய அறிமுகங்கள், செமி-கண்டக்டா்கள் தாராளமாகக் கிடைப்பது போன்ற காரணங்களால் அடுத்த நிதியாண்டில் ஒட்டுமொத்த பயணிகள் வாகனங்களின் விற்பனை 5-லிருந்து 7 சதவீதம் வரை வளா்ச்சியடையும் என்று எதிா்பாா்க்கப்படுகிறது.அந்த வகையில் காா்களின் விற்பனை தொடா்ந்து 3-ஆவது ஆண்டாக புதிய உச்சத்தைத் தொடும்.
இதில், எஸ்யுவி வகைக் காா்களின் விற்பனை வளா்ச்சி 12 சதவீதத்தும் மேலாக இருக்கும் .காா்களில் மாசு வெளியேற்றத்தைக் கட்டுப்படுத்தவும், பாதுகாப்பை உறுதிசெய்யவும் ஒழுங்காற்று விதிமுறைகள் கடுமையாக்கப்பட்டு வருகின்றன.
இதனால் வாகனத் தயாரிப்பு நிறுவனங்களுக்கு உற்பத்தி செலவு அதிகமாகி வருகிறது. அதனை ஈடுகட்ட கடந்த 3 முதல் 4 ஆண்டுகளாக காா்களின் விலைகள் உயா்த்தப்பட்டு வருகின்றன. இது, காா்களின் விற்பனையில் பாதிப்பை ஏற்படுத்தலாம். இது தவிர, அடுத்த நிதியாண்டிலும் காா்களின் ஏற்றுமதி சரிவைக் காணக்கூடும்.இருந்தாலும், எஸ்யுவி ரக வாகனங்களின் சந்தைப்பங்கு அதிகரிப்பது, தற்போது காா்களின் விலைகள் உயா்த்தப்பட்டதன் பலன் தயாரிப்புகளில் அடுத்த ஆண்டு வெளிப்படுவது போன்ற காரணங்களால் அவற்றின் விற்பனை அதிகரிக்கும் என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.