அமெரிக்காவில், செயின்ட் லூயிஸ் கவுண்டியில் உள்ள ஃபெர்குசன் பகுதியில், நான்கு குழந்தைகளுடன் தனியாக வசித்துவந்த ஆசிரியையின் வீட்டில் தீ விபத்து ஏற்பட்டு, ஐவர் உயிரிழந்த சம்பவத்தில், திருப்புமுனையாக, அது விபத்து அல்ல `கொலை – தற்கொலை” என போலீஸார் கண்டறிந்திருக்கின்றனர்.
இந்தச் சம்பவத்தில், `2013-ல் Missouri Teacher of the Year’ எனும் சிறந்த ஆசிரியருக்கான விருது பெற்ற பெர்னாடின் பேர்டி ப்ரூஸ்னர் (Bernadine Birdie Pruessner) என்பவரின் வீட்டில் திங்களன்று தீ விபத்து ஏற்பட்டது. இதில், பேர்டி ப்ரூஸ்னர் உட்பட அவரின் குழந்தைகளான 9 வயது இரட்டையர்கள் எல்லி ப்ரூஸ்னர் (Ellie Pruessner), ஐவி ப்ரூஸ்னர் (Ivy Pruessner), 5 வயது ஜாக்சன் ஸ்பேடர் (Jackson Spader), 2 வயது மிலி ஸ்பேடர் (MIllie Spader) ஆகியோர் உயிரிழந்தனர்.


முதலில் இது விபத்து என்றே நம்பப்பட்டது. இருப்பினும், இதில் தொடர்ந்து விசாரணை மேற்கொண்ட செயின்ட் லூயிஸ் கவுண்டி போலீஸ், இந்த சம்பவத்தைக் கொலை – தற்கொலை என்று கூறியிருக்கிறது. இது குறித்து புதனன்று கவுண்டி போலீஸ் அலுவலகம் ஓர் அறிக்கையில், “பேர்டி ப்ரூஸ்னர் வேண்டுமென்றே படுக்கைக்குத் தீ வைத்ததாக நம்பப்படுகிறது. ஏனெனில், விசாரணையில் தீ படுக்கையிலிருந்துதான் பரவியிருக்கிறது. மேலும், பேர்டி ப்ரூஸ்னர் தனது உயிரையும், தன் குழந்தைகளின் உயிரையும் பறிக்க வேண்டும் என்ற எண்ணம் குறித்தும், ஒரு குறிப்பு வெளியிட்டிருக்கிறார்” என அதன் உள்ளடக்கங்கள் எதுவும் வெளியிடாமல் தெரிவித்திருக்கிறது. போலீஸாரின் இத்தகைய கூற்றுக்கு ஏற்றவாறே, பேர்டி ப்ரூஸ்னர் தனது மூகநூலில் இறுதியாகப் பதிவிட்ட மூன்று பதிவுகள் கவனிக்க வைத்திருக்கிறது.