2025-ம் ஆண்டின் தொடக்கம் பங்குச் சந்தைகளுக்கு உற்சாகமானதாக அமைந்துள்ளது. ஆண்டின் முதல் வர்த்தக தினமான கடந்த புதன்கிழமையன்று சென்செக்ஸ் 368 புள்ளிகளும், நிஃப்டி 98 புள்ளிகளும் உயர்ந்தன. இந்த நிலையில், உள்நாடு மற்றும் ஏற்றுமதி ரீபண்டுகள் கணிசமான அளவு அதிகரித்த போதிலும் கடந்த டிசம்பர் மாதத்தில் மொத்த ஜிஎஸ்டி வசூல் 7.3 சதவீதம் அதிகரித்து ரூ.1.77 லட்சம் கோடியை எட்டியதாக வெளியான புள்ளிவிவரம் முதலீட்டாளர்களிடையே நம்பிக்கையை மேலும் வலுப்படுத்தியது.
அதன் காரணமாக, புத்தாண்டின் இரண்டாவது வர்த்தக நாளான நேற்று பங்குச் சந்தையில் வர்த்தகம் விறுவிறுப்புடன் காணப்பட்டது. சென்செக்ஸ் 1,436 புள்ளிகள் (1.83 சதவீதம்) அதிகரித்து 79,943 புள்ளிகளில் நிலைத்தது. ஒரு மாதத்துக்குப் பிறகு சென்செக்ஸ் ஒரே நாளில் இந்த அளவுக்கு உயர்ந்தது இதுவே முதல் முறை. வர்த்தத்தின் இடையே சென்செக்ஸ் 1,525 புள்ளிகள் வரை அதாவது 1.94 சதவீதம் வரை அதிகரித்தது.
தேசிய பங்குச் சந்தை குறியீட்டெண் நிஃப்டி 445 புள்ளிகள் (1.88 சதவீதம்) உயர்ந்து 24,188 புள்ளிகளில் நிலைபெற்றது.
பஜாஜ் பைனான்ஸ் 6 சதவீதம் அதிகரித்த நிலையில் பஜாஜ் ஃபின்சர்வ் பங்கின் விலை 8 சதவீதம் உயர்ந்தது. மாருதி, டைட்டன், மஹிந்திரா, இன்போசிஸ், ஹெச்சிஎல், சோமாட்டோ, அல்ட்ராடெக் பங்குகளுக்கும் முதலீட்டாளர்களிடையே அதிக வரவேற்பு காணப்பட்டது. இருப்பினும், சன் பார்மா பங்குகள் மட்டும் குறைந்த விலைக்கு கைமாறின.