பெட்டாலிங் ஜெயா:
நாட்டில் வெப்பம் மற்றும் வறட்சியான காலநிலையும் தொடரும் நிலையில், பல்வேறு பகுதிகளில் வெப்ப அலைத் தாக்கம் குறித்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
கெடா மாநிலத்தின் பொகோக் சேனா மாவட்டத்தில் மார்ச் 16ஆம் தேதி, வெப்ப அலை தொடர்பில் இரண்டாம் நிலை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அங்கு இத்தகைய எச்சரிக்கை விடுக்கப்படுவது இரண்டாம் முறையாகும்.
மார்ச் 15ஆம் தேதி, பெர்லிஸ் மாநிலத்தில் விடுக்கப்பட்ட இரண்டாம் நிலை எச்சரிக்கை, மறுநாள் முதல் நிலை எச்சரிக்கையாகக் குறைக்கப்பட்டது.
கோலாலம்பூரிலும், கெடா, பேராக், பாகாங், சிலாங்கூர் ஆகிய மாநிலங்களின் சில பகுதிகளிலும் முதல் நிலை வெப்ப அலை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளன.
தொடர்ந்து மூன்று நாள்களுக்கு வெப்பநிலை 37 முதல் 40 டிகிரி செல்சியசாக இருந்தால் இரண்டாம் நிலை எச்சரிக்கை விடுக்கப்படும். வெப்பநிலை தொடர்ந்து மூன்று நாள்களுக்கு, 35க்கும் 37 டிகிரி செல்சியசுக்கும் இடைப்பட்டிருந்தால் முதல் நிலை எச்சரிக்கை விடுக்கப்படும்.
இவ்வேளையில், பெர்லிசிலும் கெடாவிலும் அணைகளில் நீர்மட்டம் எச்சரிக்கை விடுக்கப்படும் அளவிற்கு, மிகவும் குறைந்ததாக தேசிய நீர் ஆணையத் தகவல்கள் கூறுகின்றன.
ஜோகூரிலும் செம்ப்ரோங் பராட் அணையில் நீரின் அளவு 35.23 விழுக்காடு மட்டுமே இருப்பதாகக் கூறப்பட்டது.
மலேசிய வானிலை ஆய்வு மையம் கடந்த மார்ச் 13ஆம் தேதி வெளியிட்ட ஒரு வறட்சிக் கண்காணிப்பு அறிக்கையில், நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் வழக்கமான நிலை பதிவானதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பெர்லிசின் சுபிங், கிளந்தானின் கோத்தா பாரு, மலாக்கா, பேராக்கின் சித்தியவான் போன்றவற்றில் மிதமானது முதல் மிகவும் அதிகமான வறட்சி பதிவானது.
இருப்பினும் எந்தப் பகுதியிலும் மழைப் பற்றாக்குறை 35 விழுக்காட்டிற்குமேல் பதிவாகவில்லை என்று தெரிவிக்கப்பட்டது.
பட்டர்வொர்த், லங்காவி, கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலையம், சுபாங் போன்ற இடங்களிலும் வெப்பநிலை 36 டிகிரி செல்சியசுக்குமேல் பதிவானது.
இதற்கிடையே, அடுத்த ஏழு நாள்களுக்கு மலேசியாவின் பெரும்பாலான பகுதிகளில் வெப்பநிலை 35 டிகிரி செல்சியசுக்குமேல் இருக்குமென்று வானிலை ஆய்வகம் முன்னுரைத்துள்ளது.