புதுடெல்லி: தொடை பகுதியில் ஏற்பட்ட காயம் குணமடையாததால் தரம்சாலாவில் இங்கிலாந்து அணிக்கு எதிராக நடைபெற உள்ள கடைசி மற்றும் 5-வது டெஸ்ட் போட்டியில் இருந்தும் கே.எல்.ராகுல் விலகக்கூடும் என தகவல்கள் வெளியாகி உள்ளன.
கே.எல்.ராகுல், இங்கிலாந்து அணிக்கு எதிராக ஹைதராபாத்தில் நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியில் பங்கேற்றார். இதன் பின்னர் தொடை பகுதியில் ஏற்பட்ட காயம் காரணமாக அடுத்த 3 டெஸ்ட் போட்டிகளிலும் பங்கேற்கவில்லை. இதற்கு காரணம் பேட்டிங் செய்யும் போது கே.எல்.ராகுலுக்கு தொடை பகுதியில் வலி ஏற்படுவதுதான். காயம் முழுமையாக குணமடையாத நிலையில் இதுதொடர்பாக மருத்துவர்களின் ஆலோசனை பெறுவதற்காக கே.எல்.ராகுல் லண்டன் சென்றுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
ஏற்கெனவே டெஸ்ட் தொடரை இந்திய அணி வென்றுவிட்டதால், தரம்சாலாவில் வரும் 7-ம் தேதி தொடங்கும் இங்கிலாந்து அணிக்கு எதிரான கடைசி மற்றும் 5-வது டெஸ்ட் போட்டியில் கே.எல்.ராகுல்களமிறங்குவதற்கான சாத்தியக்கூறுகள் இல்லை என்றே கருதப்படுகிறது. ஐபிஎல், டி 20 உலகக் கோப்பை தொடர் மற்றும் வங்கதேசம், நியூஸிலாந்து, ஆஸ்திரேலிய அணிகளுக்கு எதிரான டெஸ்ட் தொடர் ஆகியவை அடுத்தடுத்து நடைபெற உள்ளதால் அதற்குள் முழு உடற்தகுதியை எட்டுவதில் தீவிர முனைப்பு காட்டி வருகிறார் கே.எல்.ராகுல்.
ராஞ்சி டெஸ்டில் ஓய்வு அளிக்கப்பட்டிருந்த இந்தியாவின் பிரதான வேகப்பந்து வீச்சாளரா ஜஸ்பிரீத் பும்ரா, தரம்சாலாவில் விளையாடக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. டெஸ்ட் தொடரை இந்திய அணி வென்றுவிட்டாலும், உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிகள் பட்டியலில் ஒவ்வொரு டெஸ்ட் போட்டியும் முக்கியத்துவம் வாய்ந்ததாக அமைந்துள்ளது.