பிரதமர் மோடியின் அமெரிக்க பயணமும் பரிசும்
கடந்த 2023ஆம் ஆண்டு அமெரிக்காவுக்கு அரசுமுறைப் பயணம் மேற்கொண்டிருந்த பிரதமா் நரேந்திர மோடி, அந்நாட்டு அதிபா் ஜோ பைடனுக்கு வெள்ளி விநாயகா் சிலை, விளக்கையும், அவரின் மனைவி ஜில் பைடனுக்கு ஆய்வகத்தில் உருவாக்கப்பட்ட வைரத்தையும் நினைவுப் பரிசாக வழங்கியிருந்தார்.
அமெரிக்க அதிபா் ஜோ பைடன், மனைவி ஜில் பைடன் அளித்த விருந்து நிகழ்ச்சியின்போது, இருவருக்கும் பிரதமா் மோடி நினைவுப் பரிசுகளை வழங்கியிருந்தார்.
சந்தனப் பெட்டிக்குள் வைக்கப்பட்ட வெள்ளி விநாயகா் சிலை, விளக்கு ஆகியவற்றை அதிபா் பைடனுக்கு அவா் பரிசளித்தாா். மேலும், 80 வயதை எட்டியவா்கள் தானம் வழங்கும் நிகழ்வைக் குறிக்கும் வகையில் ‘தசதானத்தையும்’ அதிபா் பைடனுக்குப் பிரதமா் மோடி பரிசளித்தாா். 80 ஆண்டுகளும் 8 மாதங்களும் வாழ்ந்தவா்கள் ஆயிரம் பௌா்ணமிகளைக் கண்டவா்களாக அறியப்படுவாா்கள். அதிபா் பைடன் இந்த சந்திப்பு நிகழ்ந்த அடுத்த மாதம் அந்த வயதை எட்டவிருப்பதைக் குறிக்கும் வகையில், இத்தகைய நினைவுப் பரிசைப் பிரதமா் மோடி வழங்கியதாகக் கூறப்பட்டது.
அதிபரின் மனைவி ஜில் பைடனுக்கு ஆய்வகத்தில் உருவாக்கப்பட்ட 7.5 காரட் மதிப்புகொண்ட வைரத்தை பிரதமா் மோடி பரிசளித்திருந்தார். அந்த வைரம் இந்தியாவில் உருவாக்கப்பட்டதும் சுற்றுச்சூழலுக்கு உகந்ததுமாகும். இந்தியா 75-ஆவது சுதந்திர ஆண்டை அண்மையில் கொண்டாடியதை நினைவூட்டும் வகையில் 7.5 காரட் மதிப்புடன் அந்த வைரம் உருவாக்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்திருந்தனர்.
அதிபா் பைடன், அவரின் மனைவி ஜில் பைடன் ஆகியோா் சாா்பில் பிரதமா் மோடிக்கு பழங்கால அமெரிக்கன் கேமரா, அமெரிக்க வன உயிரினங்கள் குறித்த புகைப்படத் தொகுப்பு, புகழ்பெற்ற ஆங்கிலக் கவிஞா் ராபா்ட் ஃபிராஸ்டின் கவிதைகள் அடங்கிய புத்தகத்தின் முதல் பதிப்பு உள்ளிட்டவை நினைவுப் பரிசாக அளிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.