புதுடெல்லி: காகிதம் மீதான 5 சதவீத சுங்க வரியை ரத்து செய்ய வேண்டும் என்று இந்திய செய்தித் தாள் சங்கம் வலியுறுத்தி உள்ளது. இதுதொடர்பாக சங்கத்தின் தலைவர் ராகேஷ் சர்மா வெளியிட்ட அறிக்கை:
ரஷ்யா-உக்ரைன் போர், மத்திய மேற்கு நாடுகளில் நிலவும் பதற்றமான சூழ்நிலையால் உலகத்தின்விநியோக சங்கிலி பாதிக்கப்பட்டிருக்கிறது. இதன் காரணமாக செய்தித்தாள் காகித விநியோகமும் கடுமையாக பாதிக்கப்பட்டிருக்கிறது. செங்கடல் வழியாக செல்லும் சரக்கு கப்பல்கள் மீது தாக்குதல் நடத்தப்படுவதால் செய்தித்தாள் காகித சரக்கு போக்குவரத்து முற்றிலுமாக முடங்கி உள்ளது. செய்தித்தாள் காகிதங்களை விநியோகம் செய்யும் பல்வேறு நிறுவனங்கள் ஏற்கெனவே செய்து கொண்ட ஒப்பந்தங்களை ரத்து செய்து வருகின்றன.
இக்கட்டான சூழ்நிலையில் இந்தியா மற்றும் உலகம் முழுவதும் செயல்படும் செய்தித்தாள் தயாரிப்பு நிறுவனங்கள் தங்களது உற்பத்தியை நிறுத்தி உள்ளன.
இந்திய ரூபாயின் மதிப்பு குறைந்து வருவதால் வெளிநாடுகளில் இருந்து செய்தித் தாள் காகிதங்களை இறக்குமதி செய்வதற்கான செலவு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இவை உள்ளிட்டபல்வேறு காரணங்களால் இந்தியாவில் செய்தித் தாள் காகிதத்துக்கு பற்றாக்குறை ஏற்பட்டிருக்கிறது. செய்தித் தாள் நிறுவனங்களின் நிதிச் சுமை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடான இந்தியாவில் நாட்டு மக்களுக்கு அறிவு, ஞானத்தை ஊட்டுவதோடு, உண்மையான தகவல்களையும் அச்சு ஊடகங் கள் வழங்கி வருகின்றன. அரசின்கொள்கை முடிவுகள், நலத்திட்டங்களை மக்களிடம் கொண்டு சேர்க்கின்றன. ஆன்லைனில் வதந்திகள், பொய்கள் பரப்பப்படுவது அதிகரித்து வரும் சூழலில் அச்சு ஊடகங்கள் மட்டுமே உண்மையான தகவல்களை மக்களுக்கு அளித்து வருகின்றன. இந்த சூழலில் செய்தித் தாள் காகிதம் மீதான 5 சதவீத சுங்க வரியை மத்திய அரசு ரத்து செய்ய வேண்டுகிறோம். சுங்க வரியை ரத்து செய்தால் மட்டுமே அச்சு ஊடகங்களால் தொடர்ந்து சேவையாற்ற முடியும். இவ்வாறு அவர் கூறினார்.