சென்னை விமான நிலையத்தில் 5 இடங்களில் வைக்கப்பட்ட வெடிகுண்டுகள் வெடிக்கும் என்று மெயிலில் வந்த மிரட்டல் பயணிகள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னையில் உள்ள தனியார் விமான நிறுவன அலுவலகத்திற்கும், இரண்டு தனியார் அலுவலகங்களுக்கும் மெயில் மூலமாக, நேற்றும், இன்றும் மர்ம நபரிடம் இருந்து குண்டு வெடிப்பு மிரட்டல் தொடர்பான தகவல் வந்தது. அந்த மிரட்டல் தகவலில், சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தில் 5 இடங்களில் வெடிகுண்டுகள் வைக்கப்பட்டுள்ளதாகவும், அவை இன்னும் ஒரு வாரத்தில் வெடிக்கும் என்றும் கூறப்பட்டிருந்தது.
இதனைக் கண்டு அதிர்ச்சியடைந்த அந்த தனியார் நிறுவன அதிகாரிகள், உடனடியாக சென்னை விமான நிலைய இயக்குநர் அலுவலகத்திற்கு, மெயில் தகவல்களை அனுப்பி வைத்தனர். இதுதொடர்பாக, சென்னை விமான நிலைய இயக்குநர் தலைமையில் உயர்மட்ட ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. அப்போது அதிகாரிகள் அந்த தகவல்களை ஆய்வு செய்தபோது, மெயிலில் வந்தது போலியான மிரட்டல் என்பது தெரிய வந்தது.
ஆனாலும், பொது அமைதிக்கு பங்கம் விளைவிக்கும் வகையில் நடந்த இச்சம்பவம் குறித்து சென்னை விமான நிலைய காவல் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது. அதோடு விமான நிலைய பாதுகாப்புப் பணியில் இருக்கும் மத்திய தொழில் பாதுகாப்புப் படையினருக்கும், இந்த மிரட்டல் குறித்து தகவல் தெரிவித்து கூடுதல் பாதுகாப்புகளை செய்யும்படி கேட்டுக் கொண்டனர்.
இதனைய டுத்து சென்னை விமான நிலையத்தில் நேற்று இரவிலிருந்து கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. பயணிகளிடம் சோதனையை தீவிரப்படுத்தியதுடன், சென்னை விமான நிலையத்தின் கார் பார்க்கிங் பகுதிகளில் நீண்ட நேரமாக நிறுத்தி வைக்கப்படும் வாகனத்தையும் சோதனை செய்தனர்.
அத்துடன் மிரட்டல் வந்த இணையதள தகவல்களை ஆய்வு செய்ததோடு, இந்த மெயில் எந்த ஐ.டியில் இருந்து அனுப்பப்பட்டுள்ளது என்று ஆராய்ந்தனர். அப்போது போலியான இரண்டு மெயில்களை உருவாக்கி மர்மநபர்கள் இந்த மிரட்டல்களை அனுப்பியது விசாரணையில் தெரிய வந்தது. தற்போது அந்த மர்மநபர்களை போலீஸார் தீவிரமாக தேடி வருகின்றனர்.