மலேசியாவில் நடைபெற்ற விழாவில் கவிப்பேரரசு வைரமுத்துக்கு ‘பெருந்தமிழ் விருது’ வழங்கி கெளரவிக்கப்பட்டன.
1980-ம் ஆண்டில் பாரதிராஜாவின் ‘நிழல்கள்’ படத்தின் மூலமாக திரை உலகில் நுழைந்த வைரமுத்து, ‘இது ஒரு பொன் மாலைப் பொழுது…’ என்ற பாடல் மூலம் தனது வைர வரிகளால் பிரபலமானார். தேசிய விருதுகள், ‘கலைமாமணி’, ‘பத்மஸ்ரீ’, ‘சாகித்ய அகாடமி’ உள்ளிட்ட எண்ணற்ற விருதுகளையும், ‘கவியரசு’, ‘கவிப்பேரரசு’, ‘காப்பிய பேரறிஞர்’, ‘காப்பிய சாம்ராட்’ போன்ற பட்டங்களையும் பெற்ற வைரமுத்து, ஏராளமான கட்டுரைகளையும், கவிதை தொகுப்புகளையும், புதினங்களையும் படைத்து வருகிறார்.
இந்நிலையில் கவிப்பேரரசு வைரமுத்து அண்மையில் எழுதிய ‘மகா கவிதை’ நூல் தமிழகம் மட்டுமின்றி உலகளவில் தமிழ் வாசகர்களிடையே வரவேற்பை பெற்று வருகிறது.
இதை கெளரவிக்கும் வகையில், மலேசிய தமிழ் இலக்கிய காப்பகமும் தமிழ் பேராயமும் இணைந்து வைரமுத்துக்கு ‘பெருந்தமிழ் விருது வழங்கியது.
தான்ஶ்ரீ டாக்டர் எஸ் .ஏ. விக்னேஸ்வரன் தலைமையில் டத்தோ ஶ்ரீ எம். சரவணன் முன்னிலையில் கோலாலம்பூரில் நேற்று மாலை நடைபெற்ற நிகழ்ச்சியில் இந்த விருது மற்றும் 1 லட்சம் ரிங்கிட் கவிப்பேரரசு வைரமுத்துவிற்கு வழங்கப்பட்டது.
பஞ்சபூதங்களை பற்றி விரிவாக பேசும் ‘மகாகவிதை’ நூலை படித்து மகிழ்ந்த ஐந்து நிபுணர்கள் வாழ்த்துரை வழங்கி இருந்தனர்.
விருதினைப் பெற்றுக் கொண்டு பேசிய வைரமுத்து, மலேசிய தமிழ் இலக்கிய காப்பகம் மற்றும் தமிழ் பேராயத்திற்கு நன்றியை தெரிவித்தார். நிகழ்ச்சியில் கலந்து கொண்டு வாழ்த்துரை வழங்கியவர்களுக்கும் பங்கேற்ற அனைவருக்கும் அவர் நன்றி தெரிவித்தார்.