புதுடெல்லி: எம்டிஎச் மற்றும் எவரெஸ்ட் நிறுவனத்தின் மசாலா பொருட்களில் எத்திலீன் ஆக்சைடு என்ற பூச்சிக்கொல்லி இருப்பதாக ஹாங்காங் உணவு பாதுகாப்பு மையம் (சிஎப்எஸ்) தெரிவித்தது. இந்த நிறுவனங்களின் மசாலா பொருட்களை வாங்கவும், விற்கவும் தடைவிதிக்கப்பட்டது.
குறிப்பாக, எம்டிஎச் மெட்ராஸ் கறிப்பொடி, எவரெஸ்ட் மீன் குழம்பு மசாலா, எம்டிஎச் சாம்பார் மசாலா ஆகியவற்றை வர்த்தகர்கள் விற்க வேண்டாம் என சிஎப்எஸ் கேட்டுக்கொண்டது.
இந்த நிலையில் எம்டிஎச் நிறுவனம் இந்த குற்றச்சாட்டு தொடர்பாக விளக்கம் அளித்துள்ளது. அதில் கூறியிருப்பதாவது:
எம்டிஎச் நிறுவனத்தின் தயாரிப்புகள் அனைத்தும் நுகர்வோருக்கு 100 சதவீதம் பாதுகாப்பானது. எங்கள் மசாலா பொருட்களில் எத்திலீன் ஆக்சைடு இருப்பதாக ஹாங்காங் மற்றும் சிங்கப்பூர் உணவு கட்டுப்பாட்டாளர்கள் கூறிய குற்றச்சாட்டு முற்றிலும் நிராகரிக்கக்கூடியது. அதில்,உண்மைத்தன்மை இல்லை. அத்தகைய ரசாயனம் இருப்பதற்கான எந்த ஆதாரங்களும் சமர்ப்பிக்கப் படவில்லை.
மேலும், இந்த குற்றச்சாட்டு தொடர்பான எந்தவிதமான உறுதியான தகவலும் ஹாங்காங் மற்றும்சிங்கப்பூர் உணவு கட்டுப்பாட்டாளரிடமிருந்து இதுவரை நிறுவனத்துக்கு கிடைக்கவில்லை.
அதேபோன்று, இந்திய நறுமணப் பொருள் வாரியம், எப்எஸ்எஸ்ஏஐ ஆகியவையும் இந்த விவகாரம் தொடர்பாக சிங்கப்பூர் அதிகாரிகளிடமிருந்து எந்த அறிக்கையும் பெறவில்லை.
எம்டிஎச் மசாலாவை வாங்கும் வாடிக்கையாளர்களின் பாதுகாப்பு மற்றும் அப்பொருட்களின் தரத்துக்கு நாங்கள் உத்தரவாதம் அளிக்கிறோம். மசாலா பொாருட்களை சேமித்தல், பதப்படுத்தல் அல்லது பேக்கிங் என எந்தநிலையிலும் எத்திலீன் ஆக்சைடைஎம்டிஎச் நிறுவனம் பயன்படுத்து வதில்லை. உள்நாட்டிலும், சர்வதேச அளவிலும் எங்களது பொருட்களில் சுகாதாரம், பாதுகாப்பு தரங்களை கண்டிப்புடன் பின்பற்றுகிறோம். இவ்வாறு எம்டிஎச் நிறுவனம் தெரிவித்துள்ளது.
மசாலா பொருட்களின் உற்பத்தி, நுகர்வு மற்றும் ஏற்றுமதியில் இந்தியா மிக முக்கிய பங்காற்றுகிறது. 2022-23-ல் ரூ.32,000 கோடிக்கும் அதிகமான மசாலா பொருட்களை இந்தியா ஏற்றுமதி செய் துள்ளது.