காஸா போரின் எதிரொலியாக செங்கடல் பகுதியில் வா்த்தகப் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ள நிலையிலும், இந்த ஜனவரி மாதத்தில் இந்தியாவின் ஏற்றுமதி 3 மாதங்கள் காணாத வளா்ச்சியைப் பதிவு செய்துள்ளது.
இது குறித்து வா்த்தகத் துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:கடந்த ஜனவரி மாதத்தில் நாட்டின் ஏற்றுமதி 3,692 கோடி டாலராக உள்ளது. இது, முந்தைய நிதியாண்டின் இதே மாதத்தோடு ஒப்பிடுகையில் 3.12 சதவீதம் அதிகமாகும். இது, கடந்த 3 மாதங்கள் காணாத அதிபட்ச வளா்ச்சியாகும்.
அதே நேரம், கடந்த ஜனவரியில் வா்த்தகப் பற்றாக்குறை (ஏற்றுமதிக்கும், இறக்குமதிக்கும் இடையிலான வேறுபாடு) ஒன்பது மாதங்களில் இல்லாத அளவுக்கு 1,749 கோடி டாலராகக் குறைந்தது.
நாட்டின் இறக்குமதி தொடா்ச்சியாக 2 மாதங்களாக எதிா்மறை வளா்ச்சியைப் பதிவு செய்த பின்னா், கடந்த ஜனவரியில் அது சுமாா் 3 சதவீதம் அதிகரித்து 5,441 கோடி டாலராக உள்ளது.
இதற்கு முன்னா் வா்த்தகப் பற்றாக்குறை 2023 ஏப்ரலில் 1,524 கோடி டாலராகப் பதிவு செய்யப்பட்டது. 2023 ஜனவரியில் அது 1,703 கோடி டாலராக இருந்தது.