ஜார்க்கண்ட் மாநிலத்தில் ஸ்பெயினைச் சேர்ந்த சுற்றுலாப் பயணி ஒருவர் கணவர் கண்ணெதிரே கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் நாட்டையே உலுக்கியுள்ளது. நாட்டுக்கே களங்கத்தை ஏற்படுத்திய இந்த சம்பவத்தில் நான்கு பேர் இதுவரை கைது செய்யப்பட்டுள்ள நிலையில், குற்றவாளிகளுக்கு கடுமையான தண்டனை வழங்கப்படுமா?
பிரேசிலில் பிறந்த ஸ்பெயின் நாட்டைச் சேர்ந்தவர் அந்த பெண். இவரும் இவரது கணவரும் பைக்கில் உலகை சுற்றும் சாதனை முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். கடந்த 5 ஆண்டுகளில் 66 நாடுகளுக்கு மோட்டார் சைக்கிளில் பயணம் செய்துள்ளனர். இதுவரை சுமார் ஒரு லட்சத்து 70 ஆயிரம் கிலோமீட்டர் தூரத்தைக் கடந்துள்ளதாக அவர்களது சமூக ஊடக பதிவுகள் தெரிவிக்கின்றன.
அந்த வகையில் இந்தியாவுக்கு வருகை தந்த இவர்கள் இந்தியாவில் சுற்றுப்பயணத்தை முடித்துக் கொண்டு நேபாளம் வழியாக ஆஸ்திரேலியா செல்லத் திட்டமிருந்தனர். இந்தத் தம்பதி கடந்த ஆறு மாதங்களாக இந்தியாவில் தங்கி சுற்றுப்பயணம் மேற்கொண்டனர்.
தென்னிந்திய மாநிலங்கள் மற்றும் காஷ்மீர், உத்தராகண்ட், இமாச்சல பிரதேசம், ராஜஸ்தான், உத்தர பிரதேசம், மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்களில் உள்ள பல்வேறு சுற்றுலா தலங்களுக்குச் சென்றுள்ளனர்.
தனித்தனி மோட்டார் சைக்கிள்களில் பயணிக்கும் இவர்கள், இறுதியாக ஜார்க்கண்ட் வழியாக பாகல்பூர் நோக்கிச் சென்றுகொண்டிருந்தனர். பிகார் வழியாக நேபாளம் செல்ல வேண்டும் என்பது அவர்களது திட்டமாக இருந்தது.
மார்ச் 1ஆம் தேதி இரவு, அவர்கள் தும்கா மாவட்டத்தில் உள்ள குர்மஹாட் என்ற சிறிய கிராமத்தில் சாலையில் இருந்து சிறிது தொலைவில் ஒரு கூடாரம் அமைத்து உறங்கினார்கள்.
அப்போது அங்கு வந்த சில இளைஞர்கள் கூடாரத்திற்குள் நுழைந்து இருவரையும் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர். அந்த பெண்ணின் கணவரை தாக்கிய அந்த கும்பல், பெண்ணை பாலியல் வல்லுறவு செய்துவிட்டு அங்கிருந்து தப்பியோடியுள்ளனர்.
இந்தச் சம்பவத்தால் பெரிதும் பாதிக்கப்பட்ட அவர்கள் இருவரும் தட்டுத் தடுமாறி அரை மயக்கத்துடன் சாலைக்கு வந்துள்ளனர். பிறகு ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த போலீசாரிடம் நடந்ததைக் கூற, அவர்கள் சரையாஹாட் மருத்துவமனைக்கு இருவரையும் அழைத்துச் சென்றனர்.
தகவல் அறிந்து வந்த போலீஸ் உயர் அதிகாரிகள் அவர்களிடம் வாக்குமூலம் பெற்று இரவோடு இரவாக குற்றவாளிகளில் ஒருவரைப் பிடித்தனர். அவரிடம் கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தியதில், மற்ற குற்றவாளிகளின் அடையாளமும் தெரியவந்தது.
இதுவரை 4 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். மற்றவர்களும் விரைவில் பிடிபடுவார்கள் என தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் குறித்து பாதிக்கப்பட்ட பெண் தன் கணவருடன் கண்ணீர் வீடியோ வெளியிட்டிருப்பது ஒட்டுமொத்த நாட்டையும் உலுக்கியுள்ளது.
ஜார்க்கண்ட் மாநிலத்தில் சராசரியாக ஒவ்வொரு நாளும் நான்கு பெண்கள் பாலியல் வல்லுறவு செய்யப்படுகிறார்கள். கடந்த 9 ஆண்டுகளில் மொத்தம் 13,533 வல்லுறவு சம்பவங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
இதையும் படிங்க:
தமிழ்நாட்டில் போதைப் பொருள் புழக்கம் – பிரதமர் மோடி சொன்ன கியாரண்டி!
இந்த வழக்குகளில் குற்றவாளிகளுக்கு சரியான தண்டனை வழங்கப்படாததால் மீண்டும் மீண்டும் பாலியல் வல்லுறவு சம்பவங்கள் நடந்து வருவதாக பலரும் கண்டம் தெரிவித்துள்ளனர்.
நாட்டுக்கே களங்கம் ஏற்படுத்திய இந்த சம்பவத்தில் குற்றவாளிகள் கடுமையாகத் தண்டிக்கப் பட வேண்டும் என பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம். News 18 தமிழ் : வாட்ஸ் அப் சேனலை ஃபாலோ செய்யுங்கள்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE – 46, TCCL – 57, SCV – 28, VK Digital – 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்…