சென்னை: இந்தியாவில் இயங்கும் ஆப்பிள் நிறுவன தொழிற்சாலைகளில் பணியாற்றி வரும் ஊழியர்களுக்காக சுமார் 78,000 வீடுகளை கட்டும் திட்டத்தை ஆப்பிள் முன்னெடுத்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. ஊழியர்களின் வாழ்வினை மேம்படுத்தும் நோக்கில் ஆப்பிள் இதனை திட்டமிட்டுள்ளது. அடுத்த ஆண்டு (மார்ச் 2025) வாக்கில் இந்த வீடுகளின் கட்டுமான பணி நிறைவடையும் என தெரிகிறது.
கடந்த சில ஆண்டுகளாக தேசிய அளவில் வேலைவாய்ப்பை உருவாக்குவதில் முக்கிய பங்காற்றியது ஆப்பிள். அந்த வகையில் சுமார் 1.5 லட்சம் வேலைவாய்ப்பு நேரடியாக கிடைக்கப்பெற்றுள்ளது. இந்நிலையில், ஊழியர்களின் நலனில் கவனம் செலுத்தும் வகையில் வீடு கட்டும் திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. தனியார் செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ள செய்தியில் இது குறித்து தகவல் வெளியாகி உள்ளது.
சீனா மற்றும் வியட்நாமில் இதே போன்ற திட்டத்தை ஆப்பிள் வெற்றிகரமாக செயல்படுத்தி உள்ளது. இந்தியாவில் செயல்பட்டு வரும் ஆப்பிள் நிறுவன தொழிற்சாலைகளில் மிகப் பெரியதாக சென்னையில் உள்ள ஃபாக்ஸ்கான் தொழிற்சாலை உள்ளது. அதன் காரணமாக தமிழகத்தில் சுமார் 58 ஆயிரம் வீடுகள் அமைய வாய்ப்புள்ளதாக தகவல். தமிழகத்தின் சிப்காட், டாடா குழுமம், எஸ்பிஆர் இந்தியா போன்ற குழுக்களின் பங்களிப்பும் இதில் அடங்கியிருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மத்திய மற்றும் மாநில அரசு, தனியார் தொழில் அதிபர்களின் பங்களிப்பும் இதில் உள்ளதாக தகவல். அடுத்த ஆண்டுக்குள் கட்டுமான பணியை நிறைவு செய்யும் வகையில் இந்த உதவிகள் பெறப்படுகின்றன. இந்த வீடுகளை ஒதுக்கீடு செய்வதில் மகளிருக்கு முக்கியத்துவம் வழங்கப்படும் என தெரிகிறது. தொலைதூரத்தில் இருந்து பயணம் செய்து வந்து பணியாற்றும் பெண் ஊழியர்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் இது அமையும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.