சென்னை: இடுபொருட்களின் விலை உயர்வால், 4 வகையான ஐஸ்கிரீம் விலையை அதிகரித்துள்ளதாக ஆவின் நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது.
ஆவின் நிறுவனத்தின் சாக்கோ பார், பால் வெண்ணிலா, கிளாசிக் கோன் வெண்ணிலா, கிளாசிக் கோன் சாக்லேட் ஆகிய 4 வகையான ஐஸ் கிரீம்களின் விலை ரூ.2முதல் ரூ.5 வரை உயர்த்தப்பட்டுள்ளது. இதுகுறித்து ஐஸ்கிரீம் விற்பனையாளர்களுக்கு ஆவின் நிர்வாக இயக்குநர் வினீத் சுற்றறிக்கை அனுப்பினார். இந்த விலைஉயர்வு நேற்று முதல் அமலுக்குவந்தது. இதற்கு பால் முகவர்கள்சங்கம் கண்டனம் தெரிவித்திருந்தது.
இதற்கிடையில், ஆவின் ஐஸ்கிரீம் வகைகள் விலை உயர்வுக்கு இடுபொருட்களின் விலை உயர்வே காரணம் என்று ஆவின் நிறுவனம் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. இது குறித்து ஆவின் நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பு:
தமிழகத்தில் ஆவின் நிறுவனம் கடந்த 40 ஆண்டுகளுக்கும் மேலாகபால் விற்பனையில் முன்னோடி நிறுவனமாகத் திகழ்ந்து வருகிறது. ஆவின் நிறுவனம் பல்வேறு வகையான பால் உப பொருட்களை தரமானமுறையில் தயாரித்து ஆவின்பாலகங்கள் மற்றும் சில்லறை விற்பனையாளர்கள் மூலம் விற்பனை செய்கிறது.
மேலும், பொதுமக்கள் மற்றும்குழந்தைகள் விரும்பி சுவைக்கும் சுமார் 100 வகையான ஐஸ்கிரீம்களை ஆவின் நிறுவனம் விற்பனைசெய்து வருகிறது. கடந்த ஆண்டைவிட இந்த ஆண்டு கோடை காலத்தில் கூடுதலாக 20 சதவீதம் விற்பனையை அதிகரிக்க திட்டமிடப்பட்டுள்ளது.
இடுபொருட்களின் விலை சற்று உயர்ந்துள்ளதால், தற்போது 4 வகையான ஐஸ்கிரீம் விலையை மட்டும் ஆவின் நிறுவனம் மாற்றிஅமைத்துள்ளது. இந்த சிறியவிலையேற்றம் இன்றியமையாததாகும். வரும் கோடையை முன்னிட்டு, அனைத்து பொதுமக்களும் குழந்தைகளும் ஆவினின் சுவையான ஐஸ்கிரீமை வாங்கி மகிழ வேண்டும். இவ்வாறு செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.