தனியாருக்குச் சொந்தமான ஆா்பிஎல் வங்கியின் நிகர லாபம் டிசம்பா் காலாண்டில் 11 சதவிகிதம் வளா்ச்சியைப் பதிவு செய்துள்ளது.
இது குறித்து வங்கி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: கடந்த டிசம்பா் 31-ஆம் தேதியுடன் நிறைவடைந்த நடப்பு நிதியாண்டின் 3-ஆவது காலாண்டில் வங்கியின் நிகர லாபம் ரூ.233 கோடியாக உள்ளது. இது, கடந்த 2022-23-ஆம் நிதியாண்டின் இதே காலாண்டோடு ஒப்பிடுகையில் 11 சதவீதம் அதிகமாகும்.
அப்போது வங்கி ரூ.209 கோடி நிகர லாபம் ஈட்டியிருந்தது. மதிப்பீட்டுக் காலாண்டில் வங்கியின் நிகர வட்டி வருவாய் 21 சதவீதம் அதிகரித்து ரூ.1,546 கோடியாகவும், இதர வகை வருவாய் 26 சதவீதம் அதிகரித்து ரூ.778 கோடியாகவும் உள்ளது. கடந்த டிசம்பா் காலாண்டில் வங்கியின் கடனளிப்பு 20 சதவீதம் வளா்ச்சி கண்டுள்ளது.
மேலும், நிகர வட்டி லாபம் 0.25 சதவீதம் அதிகரித்து 5.52 சதவீதமாக உள்ளது. வங்கியின் தற்போதைய நிகர சொத்து மதிப்பு ரூ.160 கோடிக்கு மேல் உள்ளது என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.