சுப்ரீம் கோர்ட்டில் சமையலராக வேலை செய்பவர் அஜய் குமார் சமால். இவரின் மகள் பிரக்யா (25) இந்தியாவில் சட்டத்தில் இளங்கலை பட்டம் படித்து முடித்துள்ள நிலையில், முதுகலைப் பட்டம் படிக்க அமெரிக்காவில் விண்ணப்பித்து இருந்தார். அவருக்கு, அமெரிக்காவில் கலிஃபோர்னியா மற்றும் மிச்சிகன் பல்கலைக்கழகத்தில் படிக்க இலவச கல்வி உதவித்தொகை கிடைத்துள்ளது. இதையடுத்து அவர் அமெரிக்கா செல்ல இருக்கிறார்.
இலவச கல்வி உதவித் தொகை (ஸ்காலர்ஷிப்) கிடைத்திருப்பதை அடுத்து, அஜய் குமார் தன் மகளை தான் வேலை செய்யும் சுப்ரீம் கோர்ட்டுக்கு அழைத்து வந்திருந்தார். கோர்ட் தொடங்கும் முன்பு நீதிபதிகள் கூடும் இடத்துக்கு பிரக்யாவை அஜய் குமார் அழைத்து வந்தார். அங்கு, பிரக்யாவுக்கு வழக்கறிஞர்கள் மற்றும் நீதிபதிகள் முன்னிலையில் தலைமை நீதிபதி சந்திரசூட் பாராட்டு தெரிவித்து, நீதிபதிகள் கையெழுத்திட்ட மூன்று புத்தகங்களை பரிசாக வழங்கினார்.
அப்போது பேசிய தலைமை நீதிபதி சந்திரசூட், “பிரக்யா சாதிப்பார் என்று எனக்குத் தெரியும். அவருக்குத் தேவைப்படுவது கிடைக்க நாங்கள் உதவுவோம். நாட்டுக்கு சேவை செய்ய மீண்டும் இந்தியாவுக்கு வருவார் என்று நம்புகிறோம். பிரக்யா எதைச் செய்தாலும் அதில் அவர் சிறந்து விளங்குவார். 1.4 பில்லியன் மக்களின் கனவுகளை மிக எளிதாகத் தன் தோளில் சுமந்து செல்வார்”‘ என்றார்.
பிரக்யாவின் பெற்றோரை கௌரவிக்கும் விதமாக அவர்களுக்கு நீதிபதி சந்திரசூட் சால்வை அணிவித்தார். சந்திரசூட் காலை தொட்டு வணங்கிய பிரக்யா, தனக்கு பாராட்டு தெரிவித்தமைக்கு நன்றி தெரிவித்துக்கொண்டார்.
பிரக்யா பேசுகையில், `என் பெற்றோரால்தான் இந்த அளவுக்கு உயர முடிந்தது. அவர்களின் மகளாக இருப்பதற்குப் பெருமைப்படுகிறேன். எனது பள்ளிப் பருவத்தில் இருந்தே எனக்கு என் தந்தை உந்துதலாக இருந்திருக்கிறார். எனக்குக் கிடைக்க வேண்டிய வாய்ப்புகளை எனக்குப் பெற்றுத் தருவதில் உறுதியாக இருந்தார்.
நீதிபதி சந்திரசூட்டைப் பார்த்துதான் வழக்கறிஞராக வர வேண்டும் என்று முடிவு செய்தேன். சுப்ரீம் கோர்ட் நடைமுறைகள் நேரடியாக ஒளிபரப்பு செய்யப்படும்போது அவர் பேசுவதை அனைவரும் பார்க்க முடிகிறது. அவர் இளம் வழக்கறிஞர்களை எப்போதும் உற்சாகப்படுத்துவார். அவர்தான் என் ரோல்மாடல்” என்று குறிப்பிட்டார்.